நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசு சார்பில் மூன்று வேளாண் சட்டங்களும் எந்தவித விவாதமும் இன்றி திரும்பி பெறப்பட்டது. அத்துடன் மாநிலங்களவையில் குளிர்க்கால கூட்ட தொடர் முழுவதிற்கும் 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்ட தொடரின் கடைசி நாளில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 எம்பிகள் அவையின் மாண்பை மீறியதாக கூறி இவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் முதல் நாளே பெரும் பிரச்னையை கிளப்பியது.


 


இந்நிலையில் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று இந்த பிரச்னை மீண்டும் பெரும் பங்கு வகித்தது. இன்று இரு அவைகளில் நடந்தது என்ன?


மக்களவை:


காலை 11.05 மணிக்கு : 


  கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 


காலை 11.13 மணிக்கு: 


 மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 


மதியம் 2.02 மணி:


மக்களவை மீண்டும் கூடிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமலியில் ஈடுபட்டனர். அப்போது அவையை ஒரு மணி நேரத்திற்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். 




மதியம் 2.30 மணி:


மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி தலைவர்களுடன் அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பேசினார். 


மதியம் 3 மணி:


மக்களவை கூடிய பிறகு அனைத்து கட்சிகளும் அவை சமூகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கோரிக்கை வைத்தார். 


மதியம் 3.04 மணி:


எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷத்தை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.


மதியம் 3.10 மணி:


மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் ஊதிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களுடைய இடத்திற்கு சென்றால் விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் கூறினார்.


மதியம் 3.14 மணி:


 சபாநாயகரின் கோரிக்கை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்க மக்களவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 


 


மாநிலங்களவை:




காலை 11 மணி:


மாநிலங்களவை தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் 12 எம்பிக்கள் இடைநீக்கம் தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தனர். 


 


காலை 11.13 மணி:


மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய கோரினார். அதை அவை தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்தார். 


 


காலை 11.18 மணி:


தமிழ்நாடு வெள்ளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அவையில் பிரச்னை எழுப்பட்டது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து பேசினார். 


 


காலை 11.25 மணி:


காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 


 


காலை 11.33 மணி:


 திரிணாமுல் எம்பி டெரிக் ஓபிரையன், “நாங்கள் நாடளுமன்றத்தின் புனிதத்தை எப்போதும் சீர்குலைக்க மாட்டோம். மழைக்கால கூட்ட தொடரில் எங்களை அப்படி நடக்க வைத்தது அரசின் நடவடிக்கைகள் தான். அவர்கள் பல விஷயங்களை விவாததிற்கு கொண்டு வரவில்லை. ஆகவே அந்த 12 எம்பிக்களுக்கு பதிலாக நீங்கள் அரசு பக்கம் இருக்கும் 80 எம்பிக்களை இடைநீக்கம் செய்து இருக்க வேண்டும்” எனக் கூறினார். அத்துடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்வதாக கூறினார். 


 


காலை 11.45 மணி:


மாநிலங்களவை  வெங்கய்யா நாயுடு, “ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்ததை நான் நன்றாக பார்த்தேன். மேலும் நான் இங்கு அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தின் மாண்பை சீர்குலைக்க விடாமல் இருப்பதை பார்த்து கொள்ளவே நான் உள்ளேன். இதற்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எம்பிக்கள் மீது எடுக்கப்பட்டது” எனக் கூறினார். 


 


காலை 12-1 மணி:


மாநிலங்களவையில் கேள்வி நேரம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியின் எம்பிக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி படம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்திற்கு பின் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 




மதியம் 2.05 மணி: 


மாநிலங்களவை கூடிய உடன் மாநிலங்களவையின் அரசாங்க தலைவர் பியூஷ் கோயல், “அவை தலைவரின் முடிவிற்கு நாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம். அவை தலைவரின் முடிவு மீது விமர்சனம் வைத்து மாநிலங்களவையின் மாண்பை எதிர்க்கட்சி சிதைத்துவிட்டன. அந்த 12 எம்பிக்களும் மண்ணிப்பு கோரினால் அவர்களின் இடைநீக்கம் திரும்ப பெறப்படும்” எனக் கூறினார். 


 


மதியம் 2.19 மணி:


மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கபடுவதாக அவையின் துணை தலைவர் ஹர்வன்ஷ் தெரிவித்தார்.  


இவ்வாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன. 


மேலும் படிக்க:’அந்த விளம்பரத்தால் எனக்கு மகிழ்ச்சிதான்!’- பாஜக குளறுபடிக்கு பெருமாள் முருகன் விளக்கம்