ABP  WhatsApp

”நான் இந்த உடலில் இப்போது முழுமையானவனாக உணர்கிறேன்!” – திருநம்பி எலியட் பேஜ்!

ABP Tamil Updated at: 20 Mar 2021 12:48 PM (IST)

இந்தப் பேட்டி வெளியானதற்கு அடுத்த நாள் எலியட்டின் அம்மாவிடமிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.அப்போது அவர் சொன்னதுதான் எலியட்டுக்குத் தனது முடிவின் மீதான பிடிப்பை உறுதிபடுத்தியிருக்கிறது.

எலியட் பேஜ்

NEXT PREV

கழுத்தோடு வெட்டப்பட்டிருக்கும் தலைமயிர், ஆண் பாலினம் என்கிற அடையாளத்தை வெளிக்காட்டும் அவரது கழுத்துப் பகுதிச் சருமம். இறுகிய இயல்பான முகம், கருப்பு முழுக்கை டீஷர்ட், ஜீன்ஸ் என டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தில் கம்பீரமாக நிற்கிறார் கனடா நடிகர் எலியட் பேஜ்(34). வலது கையில் “EP: Phone home” என டாட்டூ குத்தப்பட்டிருக்கிறது. ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி. திரைப்படத்தில் வரும் சிறுவனின் நினைவாக அந்த டாட்டூ. சிறுவயதில் தான் சினிமாக்களில் பார்த்த சிறுவர்களைப் போல ஆகவேண்டும் என்பதுதான் எல்லன் (எ) எலியட் பேஜ்ஜின் ஆசையாக இருந்திருக்கிறது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தன்னைத் திருநம்பியாக அறிவித்துக் கொண்டார்.




எக்ஸ் மென், இன்செப்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் எலியட். கடந்த 2014ம் வருடம் தன்னைத் தன்பால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்ட பேஜ் தனது நீண்டநாள் காதலியான எம்மா போர்டனரை 2018ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டார்.2020ல் தன்னைத் திருநம்பியாக அவர் அறிவித்துக் கொண்டதை அடுத்துத் தற்போது இணையர்கள் இருவரும் பிரிந்துவிட்டாலும் இப்போது வரை எலியட்டுக்கான பக்கபலமாக இருந்துவருகிறார் எம்மா. திருநம்பியாக வெளிப்படுத்திக்கொண்ட பிறகு முதன்முறையாக டைம்ஸ் பத்திரிக்கைக்கான பேட்டி வழியாக உலகத்திடம் மனம் திறந்திருக்கிறார் அவர். தன்னை வெளிப்படையாகத் திருநம்பியாக அறிவித்துக் கொண்ட ஒருவர் டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படமாக இடம்பெறுவது இதுவே முதல்முறை.







பாலின அடையாளம் அதிகம் அங்கீகரிக்கப்படும் இந்த 21ம் நூற்றாண்டில் இளைஞர்கள் பலர் வெளிப்படையாகத் தங்களது பாலினத்தை அடையாளப்படுத்தி வருகின்றனர். கடந்த தலைமுறையை விட இந்த ஜெனரேஷன் இசட் (Gen Z) தலைமுறையின் இளைஞர்கள் தங்களைப் பாலின அடையாளப்படுத்துக் கொள்வது 1.8 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வு விவரங்கள் சொல்கின்றன. சர்வதேச நாடுகள் பல தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்து வருவது, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ராணுவத்தில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தது, இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 திரும்பப்பெறப்பட்டது உள்ளிட்டவை சர்வதேசப் பாலினச் சுதந்திரப் போராட்டங்களில் நிகழ்ந்த முக்கிய நகர்வுகள். இருந்தும் பண்பாடுகளுக்கு இடையிலான போரில் பாலினம்தான் பலிகடா. வாடிகன் தன்பாலினத் திருமணங்களை நடத்தமாட்டோம் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தன்னைப் பெண்ணியவாதியாக அறிவித்துக்கொண்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் வெளிப்படையாகவே மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எதிரான தொடர் கருத்துகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்தியா போன்ற மக்கள்தொகை அடர்த்தியான நாடுகளில் முற்போக்காளர்கள் பாலினமாற்றுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக இருந்தாலும், பண்பாட்டு அளவில் இதற்கான எதிர்ப்பு என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்படியான சூழல்களுக்கிடையே ஒரு சர்வதேச நடிகர் தன்னைத் திருநம்பியாக அறிவித்துக் கொண்டதை அசாத்திய துணிச்சல் எனலாம்.  அந்தத் துணிச்சலான முடிவை நோக்கிதான் நகர்ந்த பாதையில் எதிர்கொண்ட அனுபவங்களைதான் டைம்ஸ் பத்திரிகைக்கான பேட்டியாக அளித்திருக்கிறார் எலியட். அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:




படத்தில் பெண்களின் டீஷர்ட்டை அணிந்து நடிப்பது கூட எனக்கு நரகமாக இருந்தது. எக்ஸ் மென் படத்தில் நடித்தபோது நான் முழுக்க முழுக்க மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை, எனது புகைப்படங்களைப் பார்ப்பதை நான் தவிர்த்தேன்.இந்த நிலையில்தான் 2014ல் என்னைத் தன்பால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டேன்.


“நான் ஒரு உணர்ச்சிக்குவியல். எனக்கு அழத் தோன்றுகிறது,பரவாயில்லைதானே?. இது தீராத நன்றியுணர்வாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதாலும் பெருக்கெடுக்கும் கண்ணீர். அச்சமும் படபடப்பும் இருந்தாலும் எனது வாழ்க்கைப் பயணத்தில் இத்தனைதூரம் என்னால் அடியெடுத்து நகரமுடிந்ததன் காரணமாக உண்டான மகிழ்ச்சி இது. எனது பாலின அடையாளத்தை எப்போது உணரத்தொடங்கினேன் எனத் தெரியாது. ஆனால் எனக்குச் சிறு வயதிலிருந்தே தலைமயிரை வெட்டிக்கொள்வது ஆசை. எனது ஒன்பது வயதில் திடீரென ஒருநாள் அதற்குச் சம்மதம் தெரிவித்தார் எனது அம்மா. ஏதோ ஒரு பெரிய சாதனைபடைத்து வெற்றியடைந்தது போல அன்று நான் உணர்ந்தேன். ஆனால் அந்தப் பூரிப்பு எனக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நான் பத்து வயதில் சினிமாவில் நடிக்க வந்தவன். முதல் படத்துக்காக என்னை நீண்ட தலைமயிருடைய விக் வைத்து நடிக்கச் சொன்னார்கள். அதே படம் தொடராக வெளிவந்தபோது இயல்பாகவே நான் முடிவளர்க்க வேண்டி இருந்தது.  பதினாறு வயதில் நான் நடித்த பிட் போனி திரைப்படம் எனக்கான அடுத்தடுத்த படவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. ஜூனோ , எக்ஸ் மென் படங்கள் அப்படியாக அமைந்ததுதான். ஜூனோவில் எனது நடிப்பு எனக்கு ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றுத்தந்தது. ஆனால் படத்தில் பெண்களின் டீஷர்ட்டை அணிந்து நடிப்பது கூட எனக்கு நரகமாக இருந்தது. எக்ஸ் மென் படத்தில் நடித்தபோது நான் முழுக்க முழுக்க மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை, எனது புகைப்படங்களைப் பார்ப்பதை நான் தவிர்த்தேன்.இந்த நிலையில்தான் 2014ல் என்னைத் தன்பால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டேன். ஆனால் தன்பால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டது எனது பாலின அடையாளத்துக்கான தீர்வாக இருந்ததா? இல்லை!”



என்னுடைய நிறம்,எனது அந்தஸ்து அத்தனையும் எனக்கான இந்தப் பாதையை எளிமையாக்கியது. ஆனால் இதுவே ஒரு கருப்பு நிறத்தவர் இங்கே தன்னை மாற்றுப்பாலினத்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதும் அதன் பிறகான அவரது வாழ்க்கையும் எளிதாக இருப்பதில்லை.- எலியட் பேஜ்


”அதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்காலத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்தது என்னை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இருந்தது. ஜேனட் மாக், லேவர்ன் காக்ஸ் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் மாற்றுபாலினத்தவர்களாக இந்தத்துறையில் சாதித்தவர்கள். அவர்களின் வாழ்க்கை எனக்கு நம்பிக்கை அளித்தது. பி.கார்ல் எழுதிய ‘பிகமிங் எ மேன்’ புத்தகம் எனக்கான பைபிள் என்பேன். பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்ட இந்த உடலில் இருப்பதை அவமானமாக உணரத்தொடங்கினேன்.பெண் உடலில் மாற்றுப்பாலினத்தவனாகதான் என்னால் பொருத்திக்கொள்ள முடிந்தது. அதுதான் முழுமையான நான். நான் இந்த உடலில் இப்போது முழுமையானவனாக உணர்கிறேன். இதை ஒருவகையில் சுயநலமிக்க முடிவாகவே பார்க்கிறேன். என்னுடைய நிறம் எனக்குக் கொடுத்த சலுகையினால்தான் என்னால் ஒரு ஆணாக வெளிவர முடிந்தது. என்னுடைய நிறம்,எனது அந்தஸ்து அத்தனையும் எனக்கான இந்தப் பாதையை எளிமையாக்கியது. ஆனால் இதுவே ஒரு கருப்பு நிறத்தவர் இங்கே தன்னை மாற்றுப்பாலினத்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதும் அதன் பிறகான அவரது வாழ்க்கையும் எளிதாக இருப்பதில்லை. எனக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சலுகைகளைக் கொண்டு இனி அவர்களுக்காகக் குரல் கொடுப்பேன்” என்கிறார் பேஜ்.




பேஜ் சொல்லியது போல அவரது நிற அடையாளம் சமூக அளவில் கொடுத்த தனிச்சலுகை அவருக்கு உதவியாக இருந்தது என்றாலும் அவரது மனப்போராட்டத்துக்கு அது உதவியாக இருக்கவில்லை. “ஜூனோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள அவனை செக்ஸியாக உடை அணியச் சொன்னார்கள், பெண் போல மேக்கப் அணிந்துகொள்ளச் சொன்னார்கள். அது அத்தனையுமே அவனை எந்த அளவிற்குக் காயப்படுத்தியது என்பதை அவன் அருகில் இருந்து பார்த்த எனக்குத் தெரியும்.தன்னைத் தன்பால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டதால்  எக்ஸ் மென் படப்பிடிப்பின் போது அதன் இயக்குநரால் படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கொடூரமெல்லாம் அவனுக்கு நிகழ்ந்திருக்கிறது” என்கிறார் நடிகை அலியா ஷாகேட்.

ஒருவகையில் தன்பால் ஈர்ப்பாளராகத் தொடக்கத்தில் தன்னை அறிவித்துக்கொண்டது எலியட்டுக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. திரைப்பட விழாக்களுக்குக் கோட் சூட் அணிந்து செல்லத் தொடங்கினார். ஆண்கள் அணியும் ஆடைகளையே தான் அணிந்து நடிக்கச் சம்மதிக்கும் படங்களையே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். அவரது சுதந்திரத்துக்கான பாதை நீரைத் தெளிவடையச் செய்வது போல இப்படி மெல்ல மெல்லக் கட்டமைக்கப்பட்டதுதான்.


இந்தப் பேட்டி வெளியானதற்கு அடுத்த நாள் எலியட்டின் அம்மாவிடமிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.அப்போது அவர் சொன்னதுதான் எலியட்டுக்குத் தனது முடிவின் மீதான பிடிப்பை உறுதிபடுத்தியிருக்கிறது.


”உன்னை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன், மகனே!” எனச் சொல்லாலேயே மகனை உச்சி முகர்ந்திருக்கிறார் அவர்.      

Published at: 19 Mar 2021 11:19 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.