தமிழகத்தில் ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள, தட்டுப்பாடு காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஆடுகளை வாங்கி வர வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, ஆடுகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஆடு வளர்ப்பில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், திருநெல்வேலி, சேலம் மாவட்டம் இரண்டு, மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் ஆடு வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. தமிழகத்தில் கொடி கட்டி பறக்க துவங்கிய ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலம், விளை நிலங்களும் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆடு வளர்ப்புக்கான மேய்ச்சல் இடங்களின் பரப்பு வெகுவாக குறைந்து விட்டதால், இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல துவங்கி விட்டனர்.
தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளான மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி ஆகிய இடங்களில் விற்பனைக்கு வரும் ஆடுகளின் வரத்தில் 75 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆட்டுக் கறியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விற்பனைக்கு குறைந்த அளவில் ஆடுகள் வருவதால், ஆடு விலை உயர்ந்துள்ளது. ஆடு விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு கறியில் எதிரொலிக்கிறது. ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், தமிழக வியாபாரிகள் தற்போது ஆந்திர மாநிலத்துக்கு ஆடுகளை வாங்க படையெடுக்கின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து, விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக ஆடு விலையில் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் வாங்கும் ஆடுகளுக்கு போக்குவரத்து செலவுக்காக பெரும் தொகையை வியாபாரிகள் செலவு செய்கின்றனர். சேலம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் ஆட்டுக்கறியின் சராசரி விலை கிலோ 700 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டாலும், தீபாவளிக்கு முன்னரே சில இடங்களில் கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மவுசு அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளதால், தீபாவளி பண்டிகை நாட்களை தொடர்ந்து ஆட்டுக்கறியின் விலை கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை உயரம் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வாரம்தோரும் திங்கள்கிழமை ஆட்டு சந்தை நடைபெருவது வழக்கம்.இந்த சந்தை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு தனியார் பாராமரிப்பில் சந்தை நடைபெருகிறது. இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. சந்தைக்கு திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகளை அதிகளவு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். சந்தை அதிகாலை 3 மணியில் இருந்து நடைபெற்றன. இந்த சந்தைக்கு திருவாடானை மட்டுமல்லாது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், மதுரை, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம்.
இன்னும் மூன்று தினங்களில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ள நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற சந்தையில் 10 கிலோ கொண்ட ஆடுகள் ரூ 6000 லிருந்து ரூ 7000 வரை விற்பனை ஆனது. இன்று நடைபெற்ற சந்தையில் ரூ 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றன. ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் சரக்கு வாகனம், லாரி, இரண்டு சக்கர வாகனம் ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர். இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாக தீபாவளியன்று ஆட்டு இறைச்சி கிலோ 800 முதல் 900 வரை விற்க வேண்டிய நிலை ஏற்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.