தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக புதிய கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 36.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களைக் கொண்ட இந்த புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடப் பணிகளை பார்வையிட்டு தரமாகவும், விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைவிடத்தையும்  அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். பாரதிபுரம் பகுதியில் அமைய உள்ள இந்த ரயில்வே மேம்பாலத்தின் மூலம் சிவாடி மற்றும் தருமபுரி ரயில் நிலையங்களுக்கு இடையே நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவதற்கான வழிவகை ஏற்படும். இந்த சாலை மேம்பால பணிக்கு ரயில்வே திட்டப் பணிகள் 2010 -2011 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தருமபுரி புறநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அமைய உள்ள சிப்காட் தொழில் பேட்டை பகுதிகளை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”இப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய உள்ளது. இப்பகுதியில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓசூர் சிப்காட் தொழில் பேட்டையில் தற்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. இதையடுத்து தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையிலும் தொழிற்சாலைகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஓலா நிறுவனம் இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் தருமபுரி மாவட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் நீரேற்றம் செய்வதன் மூலம்  அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பயன்படும். இந்த திட்டம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது” என்றார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரன்ஸ்லி ராஜ்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி,  மாநில விவசாய அணி துணைத் தலைவர் இன்பசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.