கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து 48 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 


இது போன்ற கலாச்சாராய இறப்புகள் கடந்த காலங்களில்  தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால் கொத்து கொத்தாக தற்போது உயிர்கள் மடிந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் பலியான அனைவரும் ஏழை எளிய கூலி தொழிலாளிகள். 


உடல் வலிக்காகவும்,  களைப்பை போக்கவும் சாராயம் குடித்ததாக சிகிச்சையில் உள்ள சிலர் கூறியுள்ளனர்.  இவ்வகையில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதுபோன்ற பெரும் அவலத்திற்கு ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 



கள்ளச்சாராயத்திற்கும் விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசு அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாமலும் மதுவை காய்ச்சி குடித்தால் அதுதான் கள்ளச்சாராயம்.  அதில் போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாக மாறிவிடுகிறது. எத்தனால் எனப்படும் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக்கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடிய விஷமாகும். 


இது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மொத்த நாளில் 90 முதல் 100% ஆல்கஹால் இருக்கும் அந்த  மெத்தனாலை  நீர்த்துப்போக செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் நிகழும் என்கின்றனர் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள். 


இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது :-


மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீரழித்து விடும்.  வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும் ஆனால் அடுத்த சில வினாடிகளில் வயிறும் குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரை நுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குள் சென்று விடும்.


இதனால் சட்டென்று மூச்சு அடைத்து விடும். அதே நேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனால் விஷத்தன்மை மூளைக்கு பரவும். இதனால் மூளை செல்கள் உடனே அழிந்து விடும்.  மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். 


அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால் இதனை சிலர் உட்கொண்டு இருக்கின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்க செய்து இது தங்களை சொர்க்கத்துக்கே கொண்டு செல்லும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் இந்த எண்ணம் தான் உயிருக்கே உலை வைக்கிறது. 


மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை எந்த அளவில் அருந்துகின்றனர் என்பது முக்கியம்.  அவர்கள் குடிக்கும் விஷ சாராயம் எவ்வளவு மெத்தனால் உள்ளது பாதிப்பு அடைந்தவுடன் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.  விஷ சாராயம் குடித்து 30 நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தால் வயிற்றைக் கழுவி காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


முதலில் எந்த உறுப்பு பாதிக்கப்படும்


அதற்கு மேல் நேரம் செல்ல செல்ல உடல் மெத்தனாலை புரிந்து கொள்ள தொடங்கும் கண் பாதிப்பு ஏற்படும். வயிற்று பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு தொடர்ந்து அவர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.  சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.  இதில் ஆரம்பத்தில் பாதிக்கும் உறுப்புகள் கண் மற்றும் சிறுநீரகம் தான் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளில் முதலில் இருக்கும் மெத்தனால் வெளியில் எடுப்பார்கள் அதற்கு சில மாற்று மருந்துகளும் இருக்கிறது. 


மருந்துகள் 100% பயன்பெறாது இதனால் தான் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பது முக்கியமாகிறது. ரத்தத்தில் கலந்து விட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடையாது அந்த இடத்தில் தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்.


சட்டவிரோதமான கூட்டம் ஒரு காரணம் 


உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மெத்தனாலை தனிமனிதர்களின் கைகளில் கிடைக்க விடாமல் செய்வதற்கு ஏற்கனவே கடுமையான பல விதிகள் அமலில் உள்ளன. தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே மெத்தனால் உதவும்.


எனவே இதை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கவே செய்கின்றன. இவை அனைத்து மீறி கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி?  என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


 பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதே போல் கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்  அறிந்திருப்பார்கள்.  அவை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே காரணம்.


 இந்த சட்ட விரோத கூட்டு தான் உயிரைப் பறிக்கும் மெத்தனால் கள்ளச்சாராயம் வழியாக மனித உடலுக்குள் நுழைய வழி அமைக்கிறது என்பது சமூக மேம்பாட்டு அமைப்புகளின் ஆதங்கம்.