2024 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை விட 24 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.


இதில் ஆ.மணிக்கு அரூர் சட்டமன்றத் தொகுதியில் 85 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இதுவே அவர் வெற்றி பெறுவதற்கு காரணமாகவும் இருந்தது. இதனை அடுத்து வருகிற 24-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா தொடங்கும் நிலையில், தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக எம்பி ஆ.மணி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.  


மேலும் தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த அரூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் சிக்கிளூர், நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி, டி.அம்மாபேட்டை, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, வேப்பம்பட்டி,  மாம்பாடி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து, நன்றி தெரிவித்தார்.


அப்பொழுது கிராமங்களில் மேளதாளங்கள் முழங்க,  பெண்கள் பூத்தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, எந்த நேரத்திலும் பாடுபடுவேன். உங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை என்னிடம் கொடுத்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் என உறுதி அளித்து வருகிறார். 


மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சார்ந்த 8 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இன்று நன்றி தெரிவிக்க சென்ற திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், திமுக மேற்கு மாவட்டத்தின் சார்பில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தலா ரூ.15,000 நிதி உதவியை வழங்கினார்.


மேலும் சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான வங்கி கடன்  பெற்று தருவதாகவும், அவர்களுக்கு உறுதி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா, திமுக ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், சந்திரமோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.