தர்மபுரி அருகே புள்ள கிராமங்களில் புதிய வகை விலங்கு ஒன்று சுற்றி வந்ததால், சிறுத்தை என கருதி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நேரில் சோதனை நடத்திய வனத்துறையினர் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் பொதுமக்களை அச்சுறுத்தியது என்னவென்று கண்டுபிடித்தனர்.
வனத்துறை சோதனையில் சிக்கியது என்ன ?
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே குறிஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள கொய்யா தோட்டத்திற்குள் இருந்து நேற்று முன்தினம் வினோத சத்தம் வந்துள்ளது. அதனை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, ஆட்கள் வருவதை அறிந்த அந்த விலங்கு அந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. ஆனால் வேகமாக பாய்ந்து ஓடிய விலங்கு சிறுத்தை தோற்றத்தில் இருந்ததால், சிறுத்தை தான் ஊருக்குள் வந்தது என கிராம மக்கள் அச்சமடைந்தனர். மேலும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்ததாக தகவல், கிராமப் புறங்களில் வேகமாக பரவியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் கிராமப் புறத்திற்குள் சிறுத்தை நுழைந்ததாக தர்மபுரி வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது விலை நிலங்களில் கால் தடம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கால் தடங்களை ஆய்வு செய்த வனத்துறை
இதனை எடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை வனத் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் விவசாய தோட்டத்தில் பதிவான சிசிடிவி காட்சியில் ஒரு விலங்கு ஓடுவது போல் பதிவாகியுள்ளது. அந்த விலங்கு சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் விலங்கா என கிடைத்த கால் தடத்தினை வனத் துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வனத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த நிலத்தை சுற்றி பொறுத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வனத் துறையினர் பார்த்தனர். சிசிடிவி பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது அது மிகப் பெரிய அளவில் உள்ள காட்டு பூனை என்பது தெரியவந்தது.
காட்டுப்பூனைதான் சிறுத்தை அல்ல
இதனைத் தொடர்ந்து உருவத்தில் பெரிய அளவிலான காட்டு பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அதனை பார்த்தவர்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டனர். காட்டு பூனையின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தங்களது அன்றாட பணிகளுக்காக வெளியே வரலாம் என்றும் தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கிராம பகுதியை விட்டு சென்றனர். மேலும் தர்மபுரி பகுதியில் காட்டுப் பூனையை பார்த்த சிலர் புதுமையான விலங்காக தெரிந்ததால் சிறுத்தை என்று, குழப்பத்தில் அச்சமடைந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.