தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்ததை கண்டித்து தளி எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து உணவு தண்ணீர் தேடி கடந்த டிசம்பர் மாதம் 150க்கும் மேற்பட்ட யானைகள்  தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி விளை நிலங்களை சேதப்படுத்துவது மட்டும் அல்லாமல், மனிதர்களை தாக்கி வருகிறது. இதனால் யானைகளை மீண்டும்  கர்நாடக மாநில வனத்திற்கு இடம் பெயர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் வனப்பகுதியிலிருந்து கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை ஒன்று தேன்கனிக்கோட்டை நகருக்குள் புகுந்து ஒவ்வொரு சாலையாக இரவு முழுவதும் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையினர் அருகே உள்ள வனத்திற்கு விரட்டினர். பின்னர் அந்த ஒற்றை யானை இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அடுத்த  அந்நியாலம் கிராமத்திற்குள் புகுந்து, ஆனந்த் என்பவர் மனைவி வசந்தம்மா (37) என்பவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.  இதே போல் அப்பகுதியில் இருந்த  பசுமாடுகளை தாக்கியதில்  2 மாடுகள் உயிரிழந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை தாக்கியது.

 

இதனைத் தொடர்ந்து அந்த ஒற்றை யானை தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி அஸ்வத்ம்மா(40)  என்பவர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒற்றை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். இருவர் உடலையும் வனத்துறையினர்  தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 2 பேர்  அரசு மருத்துவமனையில் சிகிசைபெற்று வருகின்றனர்.



 

ஒரே நாளில் யானை தாக்கி  2  பெண்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து  தேன்கனிக்கோட்டை அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மற்றும் தளி எம்எல்ஏ ராமசந்திரன் ஆகியோர் வனத்துறையை கண்டித்தும், ஒற்றையானையை கும்கி வைத்து பிடிக்க வேண்டும், யானைகளிடமிருந்து  பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

 

இதுகுறித்து தகவல்அறிந்த டிஎஸ்பி முரளி தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் பொறுப்பு அப்பல நாயுடு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் நீண்ட பேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை எம்எல்ஏ ராமசந்திரன் வழங்கினார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

இதுகுறித்து தளி எம்எல்ஏ  ராமச்சந்திரன் கூறும் போது, “நான் ஏற்கனவே நேற்றைய தினம் கூட சட்டமன்ற கூட்டத்தில் தளி பகுதியில் வன விலங்குகளால் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளேன். மின் வெளி அமைக்கும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என அவர் கூறினார்

 

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜவளகிரி அருகே கும்பளாபுரம் பகுதியில் ஒற்றை யானை ஆக்ரோசமாக சுற்றிதிரிகிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.