அரூர் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி, மேற்கூரை பெயர்ந்தும், விரிசல் ஏற்பட்ட நிலையில், தினமும் அச்சத்துடன் வசித்து வரும் இருளர் இன மக்கள் புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தியுள்ளனர்.




இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள்


தருமபுரி மாவட்டம் அரூர்  வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சியில் வேடகட்டமடுவு, டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, மொண்டுகுழி, முல்லைவனம், கீழ்செங்கப்பாடி, நண்டுபள்ளம், தரகம்பட்டி, தாம்பல், ஆலம்பாடி, கருங்கல்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப் பெரிய ஊராட்சி இந்த வேடகட்டமடுவு ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில் பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இதில் ஆண்டியூர் கிராமத்தில் அருந்ததியர் மற்றும் இருளர் இன மக்கள் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் இருளர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளிலே இன்றுவரை இருந்து வருகின்றனர். பழங்காலத்து வீடு என்பதால், மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பி மட்டும் தெரிந்தவாறு எலும்புக் கூடு போல காட்சியளித்து வருகிறது. அதேப்போல் மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் இரவு நேரங்களில் உறங்க முடியாமல் தவித்து வரீகின்றனர். மழை வரும் காலங்களில் மழைநீரை பாத்திரங்கள் வைத்து பிடித்து வருகின்றனர். மேலும் எப்போழுது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் அச்சத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குடும்பமாக இருந்த நிலையில், தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால்  பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வரும் குடியிருப்புகளிலேயே அந்த கிராம மக்கள் 2, 3, குடும்பங்கள் சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் வெளியூர் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவமானத்தை வைத்து, மேற்கூரைக்கு சிமெண்ட் கலவை போட்டிள்ளனர். ஆனால் மழை கசிவது நிற்கவில்லை. மேலும் வீடுகளை பழுது பார்க்கவோ, புதிதாக கட்ட வசதியில்லாமல் இருந்து வருவதாக இருளர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் இந்த பகுதிக்கு தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறோம் என கூறி, வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.  எங்கள் இருளர் காலனியை திரும்பி கூட பார்ப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.  இந்த பிரச்சினைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர், பிடிஓ, மாவட்ட ஆட்சியர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் புகார் அளித்ததில், சிலருக்கு மட்டுமே வீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில குடும்பத்தினர், பழுதடைந்த வீட்டிலே வசித்து வருகின்றனர். அரசு சார்பில்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.  எனவே இருளர் இன காலனியில் பழுதாகியுள்ள வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, 



டி.ஆண்டியூர் இருளர் காலனியில் உள்ள வீடுகள் பழுதாக இருப்பதை, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, பாதிபாபுகளை கணக்கெடுத்து, புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.