தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம், தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த சுற்றுலா தளத்திற்கு வருபவர்கள் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிப்பதும், பரிசலில் பயணம் சென்று காவிரி ஆற்றில், கொட்டும் அருவிகளின் அழகை கண்டு ரசிப்பதும், மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பி பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட 4000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இதில் 400 பேர் பரிசல் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்வதை விரும்பி வருகின்றனர். இதனால் பரிசல் ஓட்டுபவர்களையும், பரிசல் பயணத்தையும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்து முறைப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின்  பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் பரிசல் பயணம் செல்பவர்கள் 1500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பரிசல் ஓட்டுனருக்கு 1200 ரூபாய் வழங்கப்படுகிறது.


இதற்கு முறையாக உரிமங்கள் வழங்கப்பட்டு பரிசல் இயக்குவதற்கு, மொத்தமாக ஆண்டுக்கு ஒரு முறை என அரசு ஒப்பந்தம் வழங்கி விடுகிறது. இதில் ஒப்பந்தம் எடுப்பவர்கள் அரசுக்கு பணத்தை செலுத்தி விட்டு பரிசல் இயக்கி  வருகின்றனர்.


இந்நிலையில்  நடப்பு ஆண்டிற்கான பரிசல் ஓட்டுவதற்கு டெண்டர் வரும் 18ஆம் தேதி முடிய உள்ளது.  இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான டெண்டர் விடுவதற்கான ஏலம் நேற்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சத்திற்கு ஏலம் போனது. 


மேலும் நடப்பு ஆண்டில் டெண்டர் முடியும் தருவாயில் இந்த டெண்டரை பரிசல் ஓட்டிகளே வழிநடத்தி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தது. அதேபோல் பரிசல் பயணம் செய்யும் இடங்களில் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தியதால் தங்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டது.


இதனால் தாங்கள் வருவாய் இல்லாமல் வேறு தொழிலுக்கு சென்று குடும்பங்களை நடத்தி வருவதாகவும், எனவே கடந்த ஆண்டிற்கான டெண்டர் முடியும் நிலையில் கூடுதலாக கால அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.


ஆனால் தங்களின் கோரிக்கையை செவி சாய்க்காத நிர்வாகம் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்து கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.