தருமபுரி மாவட்டம் அரூர்- கிருஷ்ணகிரி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை(59) என்பவர் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தினமும் காலை அரூரில் இருந்து மாட்டிறைச்சி வாங்கி செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல், அரூர் மாட்டிறைச்சி வாங்கி சில்வர் தூக்கு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது சில்வர் பாத்திரத்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதையறிந்து, பேருந்து நடத்துனர் ரகு என்பவர், பாத்திரத்தில் இருப்பது மாட்டிறைச்சி தானே என கேட்டுள்ளார். மேலும் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வரக்கூடாது என கூறி, நடு வழியில் பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டுள்ளார். ஆனால் பாஞ்சாலை நடுவழியில் நிறுத்தாமல், பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல், மோப்பிரிப்பட்டி அருகே வனப் பகுதியில் பாஞ்சாலையை இறக்கிவிட்டுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த பாஞ்சாலை நடந்தே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, வேறு பேருந்தில் ஏறி வீடு சென்றுள்ளார்.

 

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களிடம் பேருந்தில் பாதியில் இறக்கி விட்டதை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உறவினர்களும் கிராமத்தினரும், மீண்டும் மாலை பேருந்து அரூர் நோக்கி வந்த போது நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், பாஞ்சாலையை நடுவழியில் இறக்கி விட்டது நியாயமா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது நடத்துனர் தினசரி மூன்று பேர் இதுபோல மாட்டிறைச்சி எடுத்து வருவார்கள். ஆனால் அவரை நடுவழியில் நான் இறக்கிவிடவில்லை, பேருந்து நிறுத்தத்தில் தான் இறக்கி விட்டேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஞ்சாலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டலத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண் பயணியை பாதுகாப்பில்லாமல், நடு வழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துனர் ரகு இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே நவலை அருகில் உள்ள போளையம்பள்ளி கிராமத்தில் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்ற பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் அரங்கேறியது. தொடர்ந்து இதே பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவதால், இந்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.