அரூர் அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துனர் மீது பெண் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

 

தருமபுரி மாவட்டம் அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை(59) என்பவர் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தினமும் காலை அரூரில் இருந்து மாட்டிறைச்சி வாங்கி செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல், தனது பேரன் தென்னரசுடன் அரூரிலிருந்து மாட்டிறைச்சி வாங்கி சில்வர் தூக்கு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது சில்வர் பாத்திரத்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதையறிந்து, பேருந்து நடத்துனர் ரகு என்பவர், பாத்திரத்தில் இருப்பது மாட்டிறைச்சி தானே என கேட்டுள்ளார். மேலும் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வரக்கூடாது என கூறி, நடு வழியில் பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டுள்ளார். அப்பொழுது பாஞ்சாலை தனக்கும் லக்கேஜ் என பயணச்சீட்டு வாங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பணத்தை வாங்காமல் முதல் பேருந்து விட்டு இறங்கு கீழே என தர குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து ஓட்டுநர் சசிகுமார் பேருந்து நிறுத்தியுள்ளார் கீழே இறங்கினால் மட்டுமே பேருந்து எடுப்போம் என தெரிவித்துள்ளனர் சுமார் 15 நிமிடம் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாஞ்சாலை நடுவழியில் நிறுத்தாமல், பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடமாறு தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல், மோப்பிரிப்பட்டி அருகே வனப் பகுதியில் பாஞ்சாலையை இறக்கிவிட்டுள்ளார். ஆனால் பாஞ்சாலையுடன் வந்த அவரது பேரன் தென்னரசுவை பேருந்து விட்டு இறக்கவில்லை. ஏனென்றால் அவர் புதிதாக இருந்ததால், அவர் கட்டை பையில் எடுத்து வந்தது,  என்னவென்று நடத்துனர் ரகுக்கு தெரியவில்லை.  இதனால் செய்வதறியாது தவித்த பாஞ்சாலை, உடல்நிலை சரியில்லாமல் முழங்கால் வலியோடு நடக்க முடியாமல்,  நடந்தே அருகில் இருந்த எட்டிபட்டி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அப்போது வந்த தனியா பேருந்து ஒன்று பாஞ்சாலை நடந்து செல்வதை பார்த்து நிறுத்தி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஞ்சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரூர் கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண் பயணியை பாதுகாப்பில்லாமல், நடு வழியில் இறக்கி விட்ட, அரசு பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துனர் ரகு இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டி பாஞ்சாலை தன்னை வயது முதிர்ந்த, உடல்நிலை சரியில்லாத மூதாட்டி என்று கருதாமல் நான் என்ன சாதி, என்பதை தெரிந்து கொண்ட நடத்துனர் ரகு,  மாட்டிறைச்சியை காரணம் காட்டி பேருந்தில்  என்னை அவமானப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு மீது அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இதனை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துனர் ரகு மீது தாழ்த்தப்பட்டோரை பொது இடத்தில் உள்ளே நுழையவிடாமல் தடுப்பது, அவமதிப்பது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 4 பிரிவின் கீழ்  அரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனை விசாரணை அதிகாரிகள் நியமிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.