கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக இருப்பதால் ஏராளமான யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மேலும் இந்த வனப்பகுதியில் தருமபுரி மாவட்ட எல்லை ஆகும். ஒருபுறம் கர்நாடகா மறுபுறம் ஆந்திர எல்லைகளை கொண்டு இருப்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியில் வரும் யானைகளும் மழைக்காலங்களில் கர்நாடக ஆந்திரா பகுதியில் இருந்து யானைகள் கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. இவ்வாறு நுழைந்து வருகின்ற யானைகள் வனப்பகுதி வழியாக விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று விடுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வனப் பகுதியில் இருந்து தமிழக வனப் பகுதிக்குள் வந்த ஒரு பெண் யானை, கடந்த வாரம் அஞ்செட்டி வனச்சரகம் பனை வனப்பகுதி, மிலிதிக்கி கிராமம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலையில் நின்று கொண்டு வந்தது. அதை பார்த்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்கு விரட்டினர். ஆனால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட அந்த யானை, மெதுவாக நடந்து காட்டுப் பகுதிக்கு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஞ்செட்டி வனத் துறையினர், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானையை தேடி வந்தனர்.
யானை உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று காலை அஞ்செட்டி வன சரகம் புதுக்கோட்டை வனப்பகுதி, பனங்கிழங்கு பீட் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உதவி வன பாதுகாப்பாளர் ராஜ மாரியம்மன், செட்டி வனச்சரக அலுவலர் பொறுப்பு முரளி மற்றும் அஞ்செட்டி வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இறந்த யானைக்கு சுமார் 37 வயது இருக்கும். இந்த யானை கர்நாடக வனப் பகுதியில் இருந்து வந்த கூட்டத்தில் இருந்து, பிரிந்த பெண் யானை என தெரியவந்தது. இதை அடுத்து வனத் துறையினர், கால்நடை மருத்துவர் மணிகண்டன் மற்றும் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு,யானை பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் யானை முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டு, உள்காயம் காரணமாக இறந்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 37 வயது மதிக்கத்தக்க யானை வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாத நிலையில், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.