கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி துறை சார்பிலும், ஒசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி துறை சார்பிலும் ரத்ததானம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தமிழகத்திலேயே மிக முக்கிய ரத்த வங்கியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மருத்துவர்களின் பல்வேறு நடவடிக்கைகளால் மாவட்டத்தில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக நடப்பாண்டில் இதுவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் 107 முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 9,817 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி மருத்துவர்கள் கூறியதாவது:- ரத்தம் என்பது நம் உடலில் உயிர் காக்கும் ஜீவதிரவமாகும். மனிதனுடைய நுரையீரலில் இருந்து உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் வாயுவை உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்கிறது. மேலும் உடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும் முக்கிய பொருளாகவும் ரத்தம் விளங்குகிறது.
ஒருவரது ரத்தம் என்பது மற்றொரு மனிதனுக்கு ஆபத்தான தருணத்தில் வாழ்வளிக்கும் அதிசய திரவம் என்றும் கூறலாம். தன்னார்வலர்கள் அளிக்கும் ஒவ்வொரு துளி ரத்தமும் விலை மதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி வருகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் ரத்தம் உள்ளது. இந்த ரத்ததானம் அளிக்கும்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்தம் தானமாக அளிக்கும்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் 24 மணிநேரத்திற்குள் நமது உடலில் மீண்டும் ஈடு செய்யப்படுகிறது.
இதனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தாராளமாக ரத்த தானம் செய்யலாம். மேலும் ரத்தம் கொடையாக அளிப்பவர்கள் உடல் தகுதியாக குறைந்தது 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களும் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் மேல் உள்ளவர்களும் ரத்த தானம் அளிக்கலாம். ரத்ததானம் அளிக்கப்படுவதால் மாரடைப்பு தடுக்கலாம், புதிய தட்டனுக்கள் உருவாக காரணமாக அமைகிறது.
ரத்ததானம் வழங்குவதால் ஒருவரின் உடலில் இருந்து சுமார் 500 கலோரிகள் எடுக்கப்படுகிறது. ஆண் பெண் பேதமின்றி தாராளமாக ரத்ததானம் அளிக்கலாம். அரசு ரத்த வங்கி மற்றும் அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் ரத்த தானம் செய்யலாம்.
மருத்துவர்களின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 107 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 9,817 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என ரத்த வங்கி மருத்துவர்கள் கூறினார்.