தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள 120 குளம், குட்டை, தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.


தண்ணீர் தேங்கியுள்ள குளத்தில் தண்ணீர் குடிக்கும் யானைகள்




இதனால் காட்டை விட்டு வெளியேறும் யானைகள்,  விலங்குகளுக்கு குடிநீர் தீர்வு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 17,000 கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.  இந்த வனத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, வனச்சரகத்தில் அதிக அளவில் யானைகளும் தருமபுரி, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய வனப்பகுதியில் மான் மற்றும் காட்டெருமைகளும் அதிக அளவில் உள்ளன.  இது தவிர சிறுத்தை, காட்டு பன்றிகள், கரடி, காட்டெருமை, உடும்பு, செந்நாய்,  பூனை, நரி, குரங்கு, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் பல்வேறு பறவைகளும் உள்ளன.


இந்த நிலையில் கடந்த நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை மழை பெய்யவில்லை. கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றது. வனப்பகுதியில் உள்ள மரங்களும் காய்ந்து வனத்தில் உள்ள காட்டாறு நீரூற்றுகள் குளம், குட்டைகள், தடுப்பணைகள், வறண்டதால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தருமபுரி மாவட்ட வனத்துறை சார்பில் டிராக்டர் மூலம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி நிரப்பினர். மேலும் அடர்ந்த வனப்பகுதியில் சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் உதவியுடன் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளுக்கு வழங்கப்பட்டது. கால்வாய்களில் இயற்கை முறையில் பொக்லைன் மூலம் குழிதோண்டி இயற்கை நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் யானை மற்றும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது ஆனாலும் யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியே வந்து சென்றன.


பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சராக அடர்த்தியான பகுதியில் பொக்லைன் மூலம் குழி தோண்டி இயற்கை நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டது.  கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் தர்மபுரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது.  தற்போது வரை மழை பெய்து வருகிறது கோடைகால மழையாக கடந்த மே மாதம் மட்டும் 167.77 மில்லி மீட்டர் மழை தர்மபுரி மாவட்டத்தில் பெய்துள்ளது. 


கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் 27.58 மில்லி மீட்டர் மழை கூடுதலாக பெய்துள்ளது.  ஆனால் சராசரி மழை அளவு பார்த்தால் மலை அளவு மிகவும்  குறைவாகும். தற்போது பருவமழை பரவலாக பெய்து வருவதால் தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள காட்டாற்றுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது கால்வாய்களின் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


மேலும் வனப்பகுதி உள்ள 120 குளம், குட்டை,  தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக யானைகள் அதிகம் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  யானைகளுக்கு தண்ணீர் தாகத்தை போக்குவதால் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதில்லை. யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் தற்போது தேங்கி நிற்கிறது.  


இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-


தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வனப்பகுதியில் உள்ள காட்டாறு, நீரூற்றுகள், குலம், குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் காட்டை விட்டு வெளியேறும் யானைகளுக்கு குடிநீர் தீர்வு ஏற்பட்டுள்ளது. வனத்தில் உள்ள மரங்களில் இலைகள் துளிர்விட்டு பசேல் என்று காட்சியளிக்கின்றது. டிராக்டரில் தண்ணீர் கொண்டு ஊற்றுவதும் சூரிய ஒளியில் மின்மோட்டார் உதவியுடன் ஆற்றலை கிணறுகளில் தண்ணீர் எடுத்து தொட்டிகளில் நிரப்பும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.  தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செழிப்பான அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.  வன விலங்குகளுக்கு தேவையான நீர் வனத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.