பாப்பிரெட்டிப்பட்டி அருகே உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். 


தேங்காய் நிலக்கடலை எண்ணெய் பிழியும் இயந்திரங்கள்


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாணியாறு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் 500 விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் மற்றும் நிலக்கடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக உலக வங்கியின் மூலம் 80 சதவீதம் மானியம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 20% என 30 லட்சம் மதிப்பிலான, புதிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் சூரிய உலர்த்தி, கடலை உடைப்பான், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.  


இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்த ஆட்சியர்


இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து இயந்திரங்களின் செயல்பாட்டினை நேரடியாக பார்வையிட்டு தேங்காய் மற்றும் நிலக்கடலை கொள்முதல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறித்து உழவர் உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடினார்.


இயந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் ஆட்சியர் அறிவுரை


மேலும் தரமான முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடையும் வகையில், விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்


உடனடியாக நூலகத்தில் நுழைந்த ஆட்சியர்


இதனைத் தொடர்ந்து மெணசி கிராமத்தில் உள்ள நூலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி,  திடீரென நுழைந்து ஆய்வு செய்தார். அப்பொழுது நூலகத்தில் தினந்தோறும் வாசிக்க வருபவர்களிடம் நூலகத்தில் போதுமான அளவு புத்தகம் இருக்கின்றதா? போதிய வசதிகள் இருக்கின்றனவா? எனவும் கேட்டு அறிந்தார்


திடீரென மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த ஆட்சியர்


தொடர்ந்து அரசு பிற்படுத்தப்பட்டோர் நல  மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆய்வு செய்தார். அதேபோல் அரசு நிர்ணயித்த பட்டியலில் உள்ள படி நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறதா என்பதை விடுதியில் உள்ள மாணவர்களிடம் கேட்டு அறிந்தார்.


அடுத்தடுத்து ஆய்வுக்கு சென்ற ஆட்சியர்


மேலும் விடுதி மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விவரம் மற்றும் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.


மாணவர்களை வாசிக்க வைத்த ஆட்சியர்


இதனை தொடர்ந்து விடுதியில் தங்கிப் பிடிக்கும் மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வழங்கி வாசிக்க செய்து, கற்றல் திறனை ஆய்வு செய்தும் மாணவர்களை அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று விடுமுறை நாட்களில் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்