தருமபுரி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தற்காலிக உதவியாளர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி கைலாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் தருமபுரி அடுத்த மிட்டாநூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மிட்டா நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி என்பவர் தனது பூர்வீக நிலம் தனது தாத்தா பச்சையப்பன்  பெயரில் இருந்துள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டா எண்ணில் காளியப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் கமலேசன் ஆகிய இருவர் பெயரில் இருந்துள்ளது. இதனால் இவர்கள் தங்களுக்கு சொந்தமில்லை. இந்த பெயரை நீக்கி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கடந்த டிசம்பர் மாதம் கணேசமூர்த்தி கேட்டுள்ளார்.

 

அதற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தனக்கு ரூபாய் 25000 ஆயிரம் பணம் கொடுத்தால், உடனடியாக மாற்றி தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தனக்கு ரூ.20 ஆயிரம் பணத்தை, இன்றே உடனடியாக கொடுத்தால், உடனடியாக மாற்றி தருகிறேன் என சொன்னதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கொடுக்க விரும்பாத  கணேசமூர்த்தி தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரையடுத்து ரசாயனம் தடவிய பணம் ரூ.20,000, கணேசமூர்த்தி இடம், இலஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கணேசமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுக்க வந்துள்ளார். அப்பொழுது இலஞ்ச பணம் ரூ.20,000-ஐ  கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கொடுக்க வந்த போது, தற்காலிக உதவியாளர் அமுதாவிடம் பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கணேசமூர்த்தி தற்காலிக உதவியாளர் அமுதாவிடம் ரூபாய் 20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். 



 

மேலும் அமுதா, பணத்தை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் இடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அமுதா மற்றும் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுவமாக பிடித்தனர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்,  அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பட்டா பெயர் மாற்றம் செய்ய, விவசாயிகள் ரூ.20,000 பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது தற்காலிக உதவியாளர் இருவரையும் இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால், கிராம மக்கள் மற்றும் தருமபுரி மாவட்ட வருவாய் துறையினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.