தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாறு அணை வழியாக பொம்மிடி வரை செல்லும் தார்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.


இதில்  பள்ளிக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என இச்சாலையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது. மேலும் உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள் என யாராக இருந்தாலும் தொப்பூர் மற்றும் சேலம், தர்மபுரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த சாலை நீண்ட நாட்களாக பழுதாகி கிடந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செய்த தொடர் மழையால் தொப்பையாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. அப்போது தார் சாலை மற்றும் பாலங்கள் உடைந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அப்போது இந்த சாலையை சீரமைக்க முடியாத நிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால், பழுதான தடுப்பு சுவர் பகுதியின் அருகே தற்காலிகமாக புதிய மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டு, பழுதான சாலையில் பெரிய அளவிலான புதிய தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்க, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல், பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.


இதனால் சாலையில் பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதியில், பள்ளங்கள் மற்றும் ஜல்லிகள் கொட்டப்பட்டு, சாலை  அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல், அப்படியே விட்டு சென்றுள்ளனர். மேலும் தரமான கட்டுமானம் இல்லாததால், சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களில்  ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். அதேபோல் பருவமழை தொடங்கினால், அணைக்கு தண்ணீர் வந்துவிடும். அதனால் பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.  எனவே பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக தொடங்கி, தொப்பையாறு அணைக்கு மீண்டும் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும். மேலும் போக்குவரத்தை சீரமைத்து பாதுகாப்பானதாகவும் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.