கடத்தூரில் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் வாழை மரங்கள்


கடத்தூர் பகுதிகளில் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் இல்லாமல் வாழை மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்..


தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.  இங்குள்ள விவசாயிகள் மஞ்சள், கரும்பு, மரவள்ளி, வாழை, நெல், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளையும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


 தண்ணீர் பற்றாக்குறை


இந்நிலையில், தருமபுரி மாவட்டம் கடத்தூர் புட்டிரெட்டிபட்டி அடுத்த வேபுதூர், தென்கரைக்கோட்டை, ராமியம்பட்டி, சிந்தல்பாடி, வகுத்தப்பட்டி அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்யப்பட்டு 10 மாதங்களில் வாழைத்தார் அறுவடை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வாழை இலை அறுவடை செய்யப்படும். இப்பகுதியில் விளையும் வாழைத்தார்கள் தருமபுரி, சேலம் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தினந்தோறும் உணவகங்களுக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை இலை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகள் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. வாழைக்கு தேவையான தண்ணீரை விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலமாக பாய்ச்சி வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தருமபுரி மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்றது. தற்போது கடத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் விவசாய கிணறுகளில் தண்ணீர் பாதாளத்துக்கு சென்று விட்டது. பங்குனி மலையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோடையில் மழை பெய்யாதால் கடத்தூர் பகுதியில் நடவு செய்யப்பட்ட வாழை மரங்களுக்கு போதிய தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகிறது. 


பல ஏக்கரில் காய்ந்து கருகும் வாழை 


இந்நிலையில் கடத்தூர், புட்டி, ரெட்டிபட்டி, தாளநத்தம், ராமியம் பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழைப்பயிர்கள் காய்ந்து வருவதால் கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையான தண்ணீர் விலை கொடுத்து வாங்கி புழுவ முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாய தினத்தில் தண்ணீர் முற்றிலுமாக இல்லாததால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் வறட்சி காரணமாக காய்ந்து கருகும் பயிர்களை முறையாக அளவீடு செய்து வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.