தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் எங்கும் அரசு மதுபான கடையில் இல்ல. இதனால் இந்த பகுதியில் உள்ள மது பிரியர்கள் கம்பைநல்லூர் சென்று மது வாங்கி அருந்துகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு அதே கிராமத்தைச் சார்ந்த சபரி என்கின்ற இளைஞர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.


இதனால் இந்த கிராமத்தில் மது பிரியர்களுக்கும் மட்டுமல்லாமல், சிறுவர்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை அடுத்து கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.




 


ஆனால் காவல் துறையினர் சபரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்த சம்பவம் சபரிக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சபரி சமூக வலை தளத்தில், எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஊரே திரண்டு வந்தாலும் எதுவும் பண்ண முடியாது என, அநாகரிகமான முறையில் கிராம மக்களை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார்.


இதனை கண்ட ஆத்திரமடைந்த கிராம மக்கள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கி விற்பனை செய்கின்ற, சபரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது சபரி சில இளைஞர்களுக்கு மது பாட்டில்களை கொடுத்து புகார் கொடுக்க சென்றவர்களை மிரட்ட, அடியாட்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த இளைஞர்கள் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு, சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காரிமங்கலம் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சபரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் சாலை மறியலில் கைவிட்டனர். இதனால் அரூர் காரிமங்கலம் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.