பாலக்கோடு அருகே மீண்டும் மீண்டும் ஒரே வீட்டில் சிறுத்தை வேட்டையாடும் காட்சியின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
விலங்குகள் நடமாட்டம்:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடி அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நுழையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டில் தொடர்ச்சியாக சிறுத்தை நுழைந்து வேட்டையாடும் சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை அட்டூழியம்:
இன்று அதிகாலை வீட்டின் வெளியே வித்தியாசமான சத்தம் கேட்டதை தொடர்ந்து, விரைந்து வெளியே சென்ற விநாயகம், தனது வீட்டின் முன்பு சிறுத்தை ஒன்றை பார்த்துள்ளார். அதன்போது, வீட்டின் முன்புறம் உறங்கிக் கொண்டிருந்த இரு சேவல்களில் ஒன்றை அந்த சிறுத்தை பதுங்கி சென்று கவ்விச் சென்றது. இந்த பகீர் காட்சி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.
ஒரே வீட்டில் இரண்டாவது முறை:
இதற்கு முன்பும், கடந்த மூன்று மாதங்களில் இதே வீட்டில் கோழி மற்றும் நாய்களை அந்த சிறுத்தை வேட்டையாடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதே சிறுத்தை மீண்டும் வந்து சேவலை வேட்டையாடியுள்ளதை காட்டும் சிசிடிவி காட்சிகள், விநாயகம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:
சிறுத்தை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது, தருமபுரி-கிருஷ்ணகிரி எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர் இந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறைப்படுத்தி மீண்டும் அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை பாலக்கோடு வனத்துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என விநாயகம் குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றன
வால்பாறை சம்பவம்:
கடந்த சில நாட்களுக்கு முன் தாயின் கண் முன்பே சிறுத்தை 4 வயது சிறுமியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோனிகா. இவர்களுக்கு 4 வயதில் ரோஷிணி என்ற மகள் உள்ளார். அந்த சிறுமி வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதுதேயிலைத் தோட்டத்தின் அருகே சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்தது. சிறுமியை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் சிறுமியின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது, இதற்கு காரணமான அந்த சிறுத்தையை வனத்துறையினர் குண்டு வைத்து பிடித்த நிலையில் டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது