தருமபுரி: கர்நாடகா மாநிலத்தில் கனமழையைத் தொடர்ந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். 

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தமிழக- கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் நீர்வரத்து உயரத் தொடங்கியது.

நேற்று மாலை நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேட்டூர் அணையில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் நீர்வெளியேற்றம் 20,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் 82.34 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர் மட்டம் இன நீர்வரத்து 18290 கன அடியாக இருந்து வரும் நிலையில், அது மெல்ல மெல்ல இன்னும் சில நாட்களில் முழுக் கொள்ளளவை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.​

மேட்டூர்: கே.ஆர்.எஸ். அணை

மேட்டூர்: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 55,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பை விநாடிக்கு 55,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பும் அதிகரிக்கப்பட உள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் தற்போது 85,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்படுகிறது.,