தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள  தென்கரைகோட்டை வாளையம்பள்ளம் பகுதியை சேர்ந்த அம்பிதுரை  (45)  மனைவி அனிதா (35) தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.


அம்பிதுரைக்கு சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அதேபோல் அம்பிதுரை உறவினரான ரமேஷ் என்பவரது விவசாய நிலமும் அருகில் இருக்கிறது. மேலும் இந்த விவசாய நிலங்கள் வனப் பகுதிக்கு அருகில் இருப்பதால், இரவு நேரங்களில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைவது வழக்கம். அப்பொழுது விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை அழித்து சேதப்படுத்துவதும், மேய்ந்து விட்டு சென்று விடுகிறது. இந்நிலையில் வன விலங்குகளின் உண்டது போக மிச்சம் மட்டுமே,  விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் வறட்சி கடுமையாக இருப்பதால், கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்களை விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ளனர். அதேபோல் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார்.


 இந்நிலையில் ரமேஷ் என்பவர், மக்காச்சோளத்தை பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல்,  இருக்க தினமும் இரவு நேரங்களில் வயலை சுற்றி இரும்பு கம்பி கட்டி, அதில் மின்சாரம் விடுவதும், அதிகாலையில் அந்த மின்சார இணைப்பை துண்டிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அம்பிதுரை மனைவி தங்களது விவசாய நிலத்தில் உள்ள தீவன பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.




அப்பொழுது வயலில் மின்சாரம் வைத்திருந்தது தெரியாமல், அனிதா அந்த கம்பியை மிதித்துள்ளார். அப்பொழுது உடலில் மின்சாரம் பாய்ந்ததில், படுகாயம் அடைந்து அனிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் வயலில் சென்று பார்த்தபோது அனிதா தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்டு உறவினர்களும் அக்கம் பக்கம் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி காவல் துறையினர் மற்றும் மின்சார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிநாதம்பட்டி காவல் துறையினர் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் சம்பவம் நடந்த இடத்தில் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாதம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் விவசாய நிலங்களில் மின்கம்பிகளில் மின்சாரம் வைக்கக் கூடாது என வனத் துறையினர் பல்வேறு வகையில் எச்சரிக்கை விடுத்து வந்தாலும், தொடர்ந்து வனப் பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் கள்ளத்தனமாக வன விலங்குகளுக்கு உயிருக்கு பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் மின்சாரம் வைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.