காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பான நிலையில், இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசையும் சாடியுள்ளார்.
முதலமைச்சரின் கண்டனப் பதிவு என்ன.?
இது குறித்து, உமர் அப்துல்லாவின் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள், நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லா, 1931 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அதற்காக சுவர்களில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது, ஒரு மாநிலம் அல்லது ஒரு தலைவரைப் பற்றியது மட்டுமல்ல, தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, மத்திய பாஜக அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது எனவும், இது காஷ்மீரில் நடக்க முடிந்தால், அது எங்கும் நடக்கலாம், எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கும் நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதோடு, ஒவ்வொரு ஜனநாயகக் குரலும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர டி. ராஜவும் கண்டனப் பதிவு
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜாவும், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரில், துணைநிலை ஆளுநர் நிர்வாகமும், ஜம்மு & காஷ்மீர் காவல்துறையும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை தடுத்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
மேலும், உமர் அப்துல்லா ஜூலை 13 அன்று தியாகிகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்த, குடிமக்கள் மற்றும் தலைவர்களுடன் சேர்ந்து சென்ற அவர்களை கைது செய்து, துன்புறுத்தியது ஏற்கமுடியாதது என்றும் கூறியுள்ளார். இந்த அவமானத்துடன் சேர்த்து, ஏராளமான தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் என்றும், கூட்டு நினைவு நாளில் அவர்களின் சொந்த வீடுகளுக்குள் அவர்கள் அமைதியாக வைக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமான எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஜனநாயக விதிமுறைகளை மீறுவது மட்டுமல்ல, இது நமது மனசாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி எவ்வளவு தூரம் சர்வாதிகார, பொறுப்பற்ற ஆட்சியின் கீழ் விழுந்துள்ளது என்பதற்கான நினைவூட்டல் என்றும் அவர் கூறியுள்ளார்.