தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் செங்கலை தயார் செய்வதற்கு களிமண், மண் ஆகியவற்றை எடுத்து செங்கல் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இதில் இந்த செங்கல் சூளைக்கு தேவையான மண் எடுப்பதற்கு உரிய முறையில் கனிம வளம் மற்றும் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ஒரு சிலர் அனுமதி பெறாமல் அதிகளவில் மண் எடுப்பதாகவும் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள பெரும்பாலான சூலைகள் கனிம துறையின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகருக்கு, ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் பல்வேறு இடங்களில் செங்கல் சூலையில் உரிமம் பெற்று இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திடீரென சோதனை நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து செங்கல் சூளைகள் கனிமவளத் துறையின் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் செங்கல் சூளைகள் நடத்துவது சட்ட விரோதம். எனவே சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், தருமபுரி கனிமவளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி அதற்கான உரிமத்தை எளிமையான வழியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், உரிமம் பெறாமல் செங்கல் சூளைகளை இயக்கப்படுவதும், அதற்கான மண், உரிய அனுமதி இன்றி பட்டா நிலங்களிலோ அல்லது கிராமத்தில் உள்ள பொது இடங்களில் இருந்தோ, ஏரி மற்றும் ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படுவது தெரியவந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.


மேலும் காவல்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடரப்படும். அதேப்போல் நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை ஒப்பந்ததாரர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி இன்றி மண் மற்றும் மணல் அள்ளப்படுவது தெரியவந்தால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் ஏரி மற்றும் ஆற்று படுகைகளில் உரிய அனுமதி பெறாமல் யாரேனும் மண், களிமண் போன்ற கனிம வளங்களை சட்டவிராதமாக எடுத்தால், பொதுமக்கள் உடனடியாக, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டருக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டுமையத்தகற்கு 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.