தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே. வேட்ரப்பட்டி ஊராட்சியில் கே.வேட்ரப்பட்டி, கருப்பிலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இதில் கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.




மேலும் ஊராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலமாக தினந்தோறும் காலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினையாகும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.


இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மழை பரவலாக பெய்து வரும் நிலையில் கே.வேட்ரப்பட்டி கிராமத்திற்கு மட்டும், கடந்த சில நாட்களாக ஊராட்சி  நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவதில்லை என கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையிலும் குடிநீர் விநியோகம் சரி செய்யப்படவில்லை. 



மேலும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து, பலமுறை ஊராட்சி மன்ற தலைவர், டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்டோரிடம் கிராமமக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் குடிநீர் வரவில்லை என முறையிடும் பெண்களிடம் டேங்க் ஆபரேட்டர், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், முறையான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி இன்று அரூர்-வேலூர் பிரதான தேசிய நெடுஞ்சாலைகள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அப்போது சாலையின் நடுவே கற்களும் வைத்து, போக்குவரத்தை துண்டித்தனர். இதனால் திருப்பத்தூர், வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நகன்றது. இது குறித்த தகவல் அறிந்து வந்த அரூர் காவல் துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது தங்கள் கிராம மக்களுக்கு குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும், டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.  


இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, களைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், அரூர்-வேலூர் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.