தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பொதுமக்களிடம் மனு வாங்கும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களின் புகார் மனுக்கள் அதன் மூலம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலும் திரும்ப பெறப்பட்டது.


இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர்,  தொடர்புடைய துறை அலுவலர்ளை அழைத்து, பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தகுதி உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 


இதனை தொடர்ந்து அரூர் அடுத்த தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில், 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மே மாதம் 2024 ‌வரை 36 ஆண்டுகள், ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்த கலையரசன் என்பவர் மருத்துவ உதவியாளராக பணியாற்றி, அரூர் சுற்று வட்டார பகுதிகளில்,  பெரியவர், தொழு நோயாளிகள், ராணுவ வீரர்கள், குழந்தைகள் என ஏழை எளிய மக்களுக்கு கண் பார்வை கிடைக்க சிறந்த சேவையாற்றி, கடந்த மே 30-ம் தேதி பணி நிறைவு பெற்றுள்ளார்.


இதனையறிந்து கண் மருத்துவ உதவியாளர் கலையரசனின் சேவையை பாராட்டும் வகையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அழைத்து, மாவட்ட  ஆட்சியர் ‌  கி.சாந்தி பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, நினைவு பரிசு வழங்ககனார். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கவுரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பால் பிரின்ஸிலி ராஜ்குமார்,  மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெயந்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.வில்சன் ராஜசேகர்(அரூர்),  காயத்ரி(தருமபுரி) உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.