தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப் பகுதியில் குடியிருந்த கிருஷ்ணன் குடும்பத்தினரை, வனத் துறையினர் ஆக்கிரப்புகள் அகற்றம் செய்வதாக கூறி, வீடுகளை இடித்து வெளியேற்றினார். இதுகுறித்த வனத் துறையினர் வீடுகளை அடித்து நொறுக்குவதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து வனத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.




இதில், சென்னை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி வனப் பகுதியில் வன விலங்குகள் வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒகேனக்கல் வனப் பகுதியில் கிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் தகர சீட்டுகள் அமைத்தும், வீடுகள் கட்டி வசித்து வந்துள்ளனர். மேலும் யானை வழித்தடம் என்பதாலும், தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடுதல், அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களை தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் வனப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற வேண்டும் என அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.


இந்த கிருஷ்ணன் என்பவருக்கு இதுவரை 2021 செப்டம்பர் மாதம் இரண்டு முறையும், அக்டோபர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கடந்த மே-02-ம் தேதி என இந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு 4 முறை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல், இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி காவல் துறை பாதுகாப்புடன் வனப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது பல்வேறு வகையில் வனத் துறையினர் மீது விமர்சனமான கருத்துக்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த ஒகேனக்கல் வனப் பகுதியில் குடியிருக்கும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பூர்வ குடிகள் அல்ல. அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட, வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு பென்னாகரம் அடுத்த அஜ்ஜம்பட்டி பகுதியில் வீட்டுமனை, விவசாய நிலம் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இவர்களை பூர்வ குடிகள் என்று சொல்வது சரியல்ல. தற்பொழுது வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்கிற வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் வனப் பகுதியில் இது போன்று குடியிருப்போர் வன விலங்குகளை வேட்டையாடும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன விலங்குகள் மனிதர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த நான்காண்டு காலமாக வனப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதற்கு முறையாக நோட்டீஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.