காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ற்றுலா பயணிகள், சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அணைகள் முழுவதுமாக நிரம்பாததால், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குறைவாகவே திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் முற்றிலுமாக தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படுகின்ற தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வந்ததால், கடந்த நான்கு மாதங்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல், காவிரி ஆறு வறண்ட பாறைகளாக காட்சியளித்து வந்தது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவிகளில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடக மாநில குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்பொழுது திடீரென வினாடிக்கு எட்டாயிரம் கன அடி வரை நீர்வரத்து உயர்ந்தது. ஆனால் குடிநீர் தேவை முடிந்த பின் காவிரியில் நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாகவே காட்சி அளித்து வந்தது. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாகவே குறைந்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள, சுற்றுலா தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பொழிய தொடங்கியது. மேலும் இந்த கோடை மழை மூன்று நாட்கள் ஒகேனக்கல் பகுதிகளில் அதிகமாக பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடந்த நான்கு மாதமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி அதிகரித்து வினாடிக்கு 500 கன அடியாக உயர்ந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.