தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநிலங்களை இணைக்கும் வழியில் தர்மபுரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக புதிய யானை வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


தர்மபுரி வனக்கோட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் ஆகிய வனப்பகுதியில் யானைகள் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் 144 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டது.


இந்த ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம் நடந்து முடிந்தது.  இன்னும் யானைகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. யானைகளை எப்பொழுதும் ஒரே இடத்தில் நீண்ட காலம் இருக்காது. இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.


இந்நிலையில் யானைகள் காப்பு  காட்டிலிருந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுக்கும் பொருட்டு காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயர் பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் தர்மபுரி வன கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு வனச்சரகம் ஈச்சம்பள்ளம்  மற்றும் அத்திமூடலூ, பெண்ணாகரம் வனச்சகரம், பூதிப்பட்டி மற்றும் சந்தப்பேட்டை, ஒகேனக்கல் வனச்சரகம் கோடுபட்டி ஆகிய கிராமங்களில் மனித விலங்கு மோதல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் கிராம மக்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கொண்ட மனித விலங்கு மோதல் தடுப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.



இக்குழுவினர் whatsapp செயலி மூலம் யானைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் இரவு ரோந்துப் பணி மேற்கொள்ள 150 எண்ணிக்கை டார்ச் லைட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மனித - விலங்கு மோதலை தடுக்கும் வகையில் வன கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் சின்னாறு வழிதடத்தில் புதிய யானை வழித்தடம் கண்டறிந்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வழித்தடம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவை இணைக்கும் வகையில் யானை வழித்தடமாக உருவாக்கப் போகிறது.


 இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-


யானைகள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது மாநிலம் விட்டு மாநிலம் வனத்தில் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு சீசனில் சென்றால் மறு சீசனில் யானைகள் திரும்பி வரும். இதனால் யானைகளுக்காக ஒரு புதிய வழித்தடத்தை மத்திய அரசு கண்டறிந்து அறிவித்துள்ளது.


இது யானை வழித்தடம் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தர்மபுரி மாவட்டத்தை பொருத்தவரை பட்டா நிலங்கள் வழியாக புதிய யானை வழித்தடம் செல்லவில்லை.


புதிய யானை வழித்தடம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மாநிலம் அடர்ந்த வனப்பகுதியை இருக்கும் வகையில் அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மனிதர்களை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு 10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது என்றனர்.