தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களை  தாக்க முயற்சி செய்த நகர்மன்ற தலைவரின் கணவர், திமுக நகர செயலாளர் மீது நடவடிக்கை எடுத்துக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள வள்ளலார் திடல் அருகில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட செல்லியம்மன் கோயிலில் சொந்தமான இடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. இதனை அதே பகுதியைச் சார்ந்த முருகேசன் என்பவர் எடுத்துள்ளார். இந்நிலையில் முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சிலரும் சேர்ந்து அந்த இடத்தில் உணவகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து, தற்காலிகமாக கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சியில் ஒப்புதல் பெறுவதற்காக போதிய ஆவணங்களுடன் விண்ணப்பத்துள்ளனர்.  ஆனால் நகராட்சியில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனால் நகராட்சி அலுவலகம் சென்று ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் சிலரும்  முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கு உரிய பதிலளிக்காமல், அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை சந்தித்து, தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்பொழுது திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகர் மன்ற தலைவர் லட்சுமி கணவர், நாட்டான் மாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து மீண்டும் தற்காலிக கட்டடம் கட்டுவதற்கான ஒப்புதல் சம்பந்தமாக ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் நகர்மன்ற அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்பொழுது நகர்மன்ற தலைவர் லட்சுமி மற்றும் அவரது கணவர் திமுக நகர செயலாளர் ஆகியோருடன் முறையிட்டுள்ளனர். அப்பொழுது திமுக நகர செயலாளர் நாட்டான் மாது யாரை கேட்டு மாவட்ட செயலாளரிடம் போனீர்கள், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து இவர்களுக்குள்ளாக வாக்குவாதம் முற்றி திமுக நகர செயலாளர், நகர் மன்ற தலைவரின் கணவருமான நாட்டான் மாது, ஒருமையில்  தகாத வார்த்தையால் பேசி அலுவலகத்தின் கதவை மூட சொல்லியுள்ளார். தொடர்ந்து அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் நகர் மன்ற தலைவர் மற்றும் அவரது இருக்கைக்கு அருகில் அமர்நிதிருந்த திமுக நகர செயலாளர், அவர்களிடம் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டு ஆவேசமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
 
இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் ரத்தினசாமி, பிரபாகரன், அருள் முருகன் ஆகியோர் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்காமல், அலைக்கழித்து வரும் நகர மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒருமையில் பேசி தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், எங்களுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதுக்கு முழு பொறுப்பு நகர மன்ற தலைவர் லட்சுமி மற்றும் அவரது கணவரும் திமுக நகர செயலாளருமான நாட்டான் அவர்கள் தான்.  எனவே வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில் திமுக நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது தங்களுக்கு தொடர்பு இல்லாத இடத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தங்களிடம் வேண்டுமென்றே ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் பிரச்சனை செய்வதற்காகவே நகர்மன்ற அலுவலகத்திற்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர். மேலும் அந்த இடத்தை இந்து அறநிலைத்துறை இடத்தை குத்தகைக்கு எடுத்தவர் முருகேசன் என்பவர். ஆனால் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாத ஒரு சிலர் வேண்டுமென்றே தங்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.