தருமபுரி சுப்பிரமணி சுவாமி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி கடனை பட்டியலிட்டு, தீர்க்க வேண்டி, கந்த சஷ்டியுடன் முருகனுக்கு பக்தர் ஒருவர் கடிதம் எழுதி போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா முடிந்த பிறகு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்ற நிலையில் நேற்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல்கள் அனைத்தையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உண்டியலில் இருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல்களில் ரூ.221777 ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும் 4 கிராம் 200 மில்லி தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது. இவை அனைத்தும் கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த உண்டியலில் பணத்துடன் ஒரு வெள்ள தாளில் கடிதம் ஒன்று இருந்தது. இதை கண்ட ஊழியர்கள் அந்த வெள்ளை தாழை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.1 கோடி கடன் பிரச்சனையை தீர்க்க முருகனுக்கு, ஒரு பக்தர் கடிதம் எழுதியுள்ளார். அதில் முருகனிடம் கடன் பிரச்சினையை தீர்க்க கந்த சஷ்டி கவசத்தில் உள்ள வரிகளை குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். அதில் யார் யாருக்கு? எவ்வளவு கடன் தர வேண்டும். நகை கடன், சங்க கடன், வீட்டுக் கடன் எவ்வளவு தொகை என தனித்தனியாக தொகை எழுதி உள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் பிரச்சனையை தீர்த்து வை முருகா என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஒருவர் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை எழுதியவர் யார் என்ற விவரம் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த கோயில் பணியாளர்கள், அதிர்ச்சியடைந்தனர்.