தருமபுரி மாவட்டம் வத்தல்மலை மலை கிராமத்தில் சின்னாங்காடு, ஒன்றியகாடு, பால் சிலம்பு, பெரியூர், நாயக்கனூர், பொட்டலாங்காடு உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.




இங்கு முக்கிய பயிராக காப்பி, மிளகு, கடுகு உள்ளிட்ட மலை பயிர்களும், கேழ்வரகு, சாமை, தினை, சோளம்,  உள்ளிட்ட சிறு தானியங்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  வத்தல்மலை மீது குளு குளுவென பனி பிரதேசத்தில் இருப்பது போன்றும், ஊட்டி, கொடைக்கானல் போன்று கொண்டை ஊசி வளைவுகளும் அமைந்துள்ளன. இதனால் தருமபுரியில் ஒரு ஊட்டி என்ற பெயரையும் பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வத்தல்மலை சுற்றுலத் தலமாக அறிவிக்கப்பட்டது.


இதனை அடுத்து வத்தல்மலைக்கு, பூமரத்தூரில் இருந்து மலையின் மேல் பகுதி வரை உள்ள நாயக்கனூர் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த மலைப்பாதை மழைக் காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மண் சரிவால் பொது போக்குவரத்து துவங்குவதில் சிக்கலான சூழ்நிலை நிலவியது. இதனால் வழக்கம் போல் பொதுமக்கள் வேன்கள், இருசக்கர வாகனங்கள் போன்ற போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


மலைப் பாதையில் ஏற்படும் சிறிய அளவிலான மண் சரிவுகளை மாவட்ட நிர்வாகம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சாலை அமைக்கும் போது, மூன்று இடத்தில் மட்டும் சாலையின் ஓரம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வத்தல் மலையில் இருந்து தருமபுரி வழியாக 40 இருக்கைகள் கொண்ட அரசு மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மழைக் காலங்களில் வத்தல்மலை மலை பாதையில் உள்ள சிறு கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது பெய்த கோடை மலைக்கு ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் பெரிய பாறைகள், சாலையின் ஓரத்தில் உருண்டு விழுந்துள்ளது. இதனால் பருவ மழை காலங்களில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படா வண்ணம், மலை சாலை முழுவதும், சாலை ஓரத்தில்,  சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, மண் சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தல்மலை குடியிருப்பு வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.