தருமபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி, தருமபுரி காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, தக்காளி, பட்டாசு பெட்டிகள், இனிப்புகள் வழங்குதல், கிராமிய நாடகக் கலைஞர்களை வைத்து எமதர்மன் வேடத்தில் உயிர்ப்பிச்சை கொடுப்பது போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.


மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவலர்களுடன் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து சென்றால், விபத்துகளில் உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே போல் கார்களில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தால் விபத்து ஏற்படும்போது காயம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். 


அப்பொழுது போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தனியார் மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள ரூ.2000 மதிப்புள்ள கூப்பன்களை காவல் துறையினர் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவது, கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வது போன்ற விதிமுறைகளை பின்பற்றினால், இதைவிட அதிக மதிப்புள்ள மனித உயிர்களையே பரிசாக பெற முடியும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் சுபாஷ், தீவிர சிகிச்சை மருத்துவர் ராமநாதன் அவர்கள், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் குணா, மேலாளர் சண்முகம், லேப் இன்சார்ஜ் நந்தகுமார் மருத்துவமனை நிர்வாகிகள், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு, சதீஷ்குமார், போக்குவரத்து காவலர் சரண்ராஜ், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.