தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானை அதிகமாக வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் பாலக்கோடு, பென்னாகரம் வனச் சரகமும், தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ஒகேனக்கல் வனச்சரகமும் அமைந்துள்ளதால், மாவட்டம் கடந்து, மாநிலம் கடந்து, யானைகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருந்து வருகிறது.


இந்நிலையில் யானைகள் வறட்சி ஏற்படுகின்ற கோடை காலத்தில் வனப் பகுதியை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் புறங்களுக்குள் நுழைவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.


இதனால் வனப் பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கிராமப் புறங்களுக்குள் நுழைவதும், விவசாய நிலங்களில் பயிர்களை அழித்து, நாசம் செய்வதுமாக இருந்து வருகிறது. 


இந்நிலையில் பாலக்கோடு பகுதியில் நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை விட்டு ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (55) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்துள்ளது. இதில்  3.5 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்கள், வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை, ஒற்றை காட்டு யானை உடைத்துள்ளது.


மேலும் மா மரங்களில் இருந்த மாம்பழங்களை தின்றும், 30க்கும் மேற்பட்ட மாமரங்கள், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களை உடைத்து நாசம் செய்துள்ளது. மேலும் கடும் வறட்சியிலும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்த, மா மரங்களில் தற்போது மாங்காய் அறுவடைக்கு இருந்த நிலையில் இருந்துள்ளது. இதனை காட்டு யானை உடைத்து, சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.


தொடர்ந்து அதிகாலை வயலுக்கு வந்து பார்த்த விவசாயி முனியப்பன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை உடைத்து நாசம் செய்ததில், சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வனத் துறையினர் முனியப்பன் நிலத்திற்கு நேரில் வந்து, ஆய்வு செய்து சேதத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும் விவசாய நிலத்தில் ஏற்பட்ட சேதத்திற்குரிய இழப்பீட்டை வனத்துறையினர் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, நிரந்திர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.