விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு விவசாயி ஒருவர் முதல்வரின் போட்டோவை கழுத்தில் மாட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சிறு விவசாயியான இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2010-ம் ஆண்டு மனு கொடுத்துள்ளார். ஆனால் பதிவு மூப்பு அடிப்படையில், மின் இணைப்பு வழங்குவாதாக தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயி
இதனால் மின் இணைப்புக்காக காத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், விவசாயத்திற்கு இலவசமாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அப்பொழுது தனக்கு மின்சாரம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு, வேடியப்பனுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 14 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற முடியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதற்காக மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் சுமார் 50 க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளார்.
கம்பத்தை மட்டும் நட்டு போட்டோ எடுத்துக் கொண்ட அதிகாரி
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மின் கம்பத்தை நட்டு அதனை அருகில் வேடியப்பனை நிறுத்தி வைத்து போட்டோ மட்டும் எடுத்துச் சென்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த ஒரு வருடத்தில் ஒரு லட்சம் விவசாய இணைப்புகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தனக்கு கிடைக்கும் என்று பதிவு செய்தும், இதுவரை அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை இல்லாமல் உள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வேடியப்பன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்பொழுது தனது பிரச்சினை தமிழ்நாடு முதல்வருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் படத்தை கழுத்தில் மாட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது நிலமிருந்தும் கிணற்றில் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளேன். நான் மின் இணைப்பு பெற கடந்த 14 ஆண்டுகளாக மனு கொடுத்து காத்திருப்பதாகவும், அதனால் தனக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் வரை தன்னுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவர்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வந்துள்ளதாக விவசாயி வேடியப்பன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்குக்கு அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். அப்பொழுது விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.