காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. 


இதனை தொடர்ந்து இரண்டு அணைகளின் பாதுகாப்பு கருதி, இரண்டு அணையிலிருந்தும், உபரி நீர் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 


இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. 


இதனால்  ஒகேனக்கல் பகுதி வெள்ளக்காடாய் காட்சி அளித்து வந்தது. மேலும் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில், ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார் கொட்டாய், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.



போக்குவரத்து நிறுத்தம்


ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக குறைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  


இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 60,000 கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து, இன்று காலை வினாடிக்கு 24,000 கன அடி குறைந்துள்ளது.


சுற்றுலா பயணிகளுக்கு தடை


ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இந்த நிலையில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 23 வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை நீடித்து வருகிறது. மேலும் தொடரும் நீர்வரத்து காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், 15 நாட்களுக்கு பிறகு இன்று நீர்வரத்து கடுமையாக சரிந்து, வெள்ளம் குறைந்துள்ளது


அதிகாரிகள் கூறியதாவது:-


மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், தமிழகத்திற்கான தண்ணீர் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை, தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.