பாப்பிரெட்டிப்பட்டியில் முறையாக மருத்துவம் படிக்காமல், போலியாக சர்டிபிகேட் வாங்கி, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல் துறையினர் கைது செய்து, ஊசி மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவல் உடனடி நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருந்தகம் வைத்துக்கொண்டு அந்த மருந்தகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகவும், மேலும் முறையான மருத்துவம் படிக்காமல் வேறு ஒருவருடைய பெயரில் மருந்தகம் அமைப்பதற்கு உரிமம் பெற்றுக் கொண்டு அதில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாகவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சுகாதார இயக்குனர் சாந்திக்கு ஆணையிட்ட மாவட்ட ஆட்சியர்
இதனை அடுத்து மாவட்ட ஊரக நலப்பணிகள் இணைய இயக்குனர் சாந்தி தலைமையில் மாவட்ட முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலி மருத்துவர்கள் கைது செய்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில் வேப்பிலைப் பெட்டியைச் சார்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெங்கடேஸ்வரா எனும் பெயரில் ஆங்கில மருந்தகம் வைத்து, மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். தொடர்ந்து மருந்தகம் வைத்த, சில மாதங்களில் அதே மருந்தகத்தில், சில நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு , ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முதலமைச்சர் தனிப்பிரிவிக்கு பொதுமக்கள் மனு
இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சர் தனிபிரிவுக்கு அளித்த புகாரின் பேரில் நேற்று தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி உத்தரவின் படி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமணை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், மருந்துகள் ஆய்வாளர் சக்திவேல், துணை தாசில்தார் சக்திவேல் ஆகியோர் கொண்ட போலி மருத்துவர் ஒழிப்பு குழுவினர் மோளையானூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மருந்தகத்திற்கு உள்ளே, படுக்கை, குலுக்கோஸ் போடும் வசதி, நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கான சிரஞ்சிகள், மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட சிரஞ்சிகள், காலி மருந்து பாட்டில்கள், காலியான குலேக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து வெங்கடேசனை, மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் போலி ஆவணங்கள் கண்டுபிடிப்பு
அந்த விசாரணையில், வெங்கடேசன் முறையாக மருத்துவம் படிக்காமல் போலியாக டிப்ளமோ சான்றிதழ் வைத்துக் கொண்டு ஆங்கில மருந்து கடை நடத்தியும், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் மருந்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் மருத்துவம் படிக்காமல், போலியாக சர்டிபிகேட் வாங்கி, மருந்தகம் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் வெங்கடேசனை, பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையின் செய்தனர். மேலும் மருந்து கடையில் இருந்து, ஊசி, மருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மோளையானூர் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல், போலியாக மருந்தகம் மற்றும் மருத்துவர் பார்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.