தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாபநாவலசு, கூடலூர், கோபால்பட்டி வேட்டைக்காரன் கொட்டாய், இந்திரா நகர், ஏரி கொடி ஆகிய கிராமப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் 8 ஆம் வகுப்பிற்கு மேல் உயர் கல்வி பயில பாபநாவலசு -பாளையம் இடையே உள்ள ஆற்றைக் கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் பாளையம் கிராமம் வரை நடந்து சென்றடைந்து, அங்கிருந்து பஸ் மூலம் தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று படித்து மீண்டும் அதேபோன்று வீடு திரும்ப வேண்டும்.
பாபநாவலசு- பாளையம் கிராமம் இடையே உள்ள ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பாய்ந்து ஓடும் பொழுது மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதேபோன்று இந்த கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு தலையில் சுமந்தும், பைக் மூலமும் தீர்த்தமலைக்கு கொண்டு செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டி கிராம மக்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
(அரூர் அருகே பாபநாவலசு - பாளையம் கிராமம் இடையே தற்பொழுது தண்ணீர் இல்லாத ஆற்றை கடந்து நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்)
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், தற்பொழுது ஆற்றில் தண்ணீர் இல்லை. நாங்கள் இந்த ஆற்றை கடந்து பாளையம் கிராமம் வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலம் தீர்த்தமலைக்கு சென்று உயர் கல்வி பயின்று வருகிறோம். பஸ் இல்லாத போது 5 கிலோமீட்டர் நடந்தே தீர்த்தமலை செல்வோம்.
மழைக்காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் ஓடும் பொழுது பெண்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தரைப்பாலம் அமைத்து காலை, மாலை பள்ளி சென்று வர பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆபத்தை உணராமல் ஆத்தங்கரையை தாண்டி செல்லும் மாணவர்கள்
கிராம மக்கள் கூறுகையில், எங்கள் வீட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில மழைக்காலங்களில் ஆபத்தை உணராமல் இந்த ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.
அதேபோன்று எங்கள் விவசாய நிலங்களில் விளையும் விவசாய பொருட்களை விற்பனைக்கு தீர்த்தமலைக்கு கொண்டு செல்ல பொருட்களை தலை மீது சுமந்தவாறு ஆற்று தண்ணீரில் நடந்து செல்வதும், பைக்கின் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லவும் சிரமமாக உள்ளது. இது தொடர்பாக எம்எல்ஏ விடம் மனு கொடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரை அணுகிய போது
இதுகுறித்து அதிமுக அரூர் எம்எல்ஏ சம்பத்குமாரிடம் கேட்டபோது, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பஸ் இயக்க போக்குவரத்து இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளேன். ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கி தரைப்பாலம் கட்டிக் கொடுக்க மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோரிக்கை வைத்து பேசினேன். மனுவும் கொடுத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன் என தெரிவித்தார்.
.