தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பாஜக மன்னர் ஆட்சியை தகர்த்தெரிந்த ஜனநாயக கொண்டாட்டம் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநில தலைவர் ஹசினா சையத் கலந்து கொண்டு, மகளிரணி நிர்வாகிகளுடன் பேசினார்.


இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த, ஹசினா, ”டெல்லிக்கு வந்த மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களைக் கண்டு ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். மோடியின் மீதும், பாஜகவின் மீதும் தமிழக மக்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என கேட்கின்றனர். தமிழகத்தில் 40க்கு 40 என்று இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து பாஜகவினரை ஓட , ஓட  விரட்டியடித்துள்ளனர். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் எடுத்தபோது, மோடிக்கு பயம் வந்துவிட்டது. தற்பொழுது இந்த அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு தலையில் வைக்கிறார். இதை தலைவணங்கி ஏற்கிறாரா என்று தெரியவில்லை. 


கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் போது, மோடி யாரையும் தலைவணங்கி கும்பிட மாட்டார். குடியரசு தலைவராகவே இருந்தாலும் கூட, மோடியை தலைவணங்கி கும்பிட வேண்டும். ஆனால் மோடி தற்பொழுது சந்திரபாபு நாயுடுக்கும், நிதீஷ் குமாருக்கும் எழுந்து நின்று தலைவணங்கி கும்பிடுகிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் உடனான இந்த கூட்டணி ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஓராண்டு காலம் கூட இது நீடிப்பது கடினம் தான். ஏனென்றால் நிதிஷ்குமார் அவ்வப்போது ஒவ்வொரு கோரிக்கைகளை வைப்பார். தனக்கு துணை பிரதமர் வேண்டும் என்று கூட கேட்பார். அவ்வாறு இருக்கும்போது மோடியின் இந்த கூட்டாட்சி என்பது எத்தனை நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறிதான். காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட போகிறது. இதை மோடியின் பாஜக ஆட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.


மாண்புமிகு மரபை மறந்த பாரத பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சாதிக்காததை இந்த 5 ஆண்டுகளில் என்ன சாதிக்கபோகிறார். நாட்டில் வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாப்பு தருவதாக கூறிய மோடி, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்தரா? பாஜகவினர் எதற்கெடுத்தாலும் காங்கிரசை குறை கூறுவதில் குறியாக இருந்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி என்ன செய்கிறார் என்பதை கவனித்து வருகின்றனர். அதேபோல் பிரியங்கா காந்தி எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டு காங்கிரசையை குறை சொல்லி வருகின்றனர். மேலும் நாங்கள் நேருவை போன்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றோம் என பேசுகின்றனர். ஆனால், நேருவை பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை. ஏனென்றால் நேரு மூன்று முறை ஆட்சி செய்தபோதும், வாக்குசதவீதம் 73, 74, 75 என  கொஞ்சம் கூட குறையாமல் வெற்றி பெற்று ஆட்சி செய்தார். ஆனால் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை விட, 2019 ஆம் ஆண்டு குறைவான வாக்கு சதவீதம் பெற்றிருந்தார். தற்பொழுது அதைவிடவும் 2024 வாக்கு சதவீதம் குறைவாக தான் பெற்று இருக்கிறார். 


நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 70 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு மோடி என்ன செய்தார். 33 சதவீதம் இன்னும் முடிவு பெறவில்லை. இளைஞர் காங்கிரஸ் சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை ராகுல் காந்தி அறிவித்த நிலையில், வலிமையான எதிர்கட்சியான காங்கிரசை, மோடி எப்படி சமாளிப்பார்” எனத் தெரிவித்தார்.