கோபிசெட்டிபாளையத்தில் யானைகளைக் கொன்று, யானை தந்தத்தை விற்பனை செய்ய காரில் எடுத்து வந்த இருவரை, கம்பைநல்லூர் அருகே வனத் துறையினர் கைது செய்து கார் மற்றும் 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.


இதனை அடுத்து வனத்துறை பறக்கும் படை குழுவினர் காரிமங்கலம் பகுதியில் ஆங்காங்கே முகாமிட்டு இருந்துள்ளனர். அப்பொழுது சேலத்தில் இருந்து வந்த வாகனத்தை, காரிமங்கலம் அடுத்த வேதரம்பட்டி அருகே சுற்றி வளைத்து வனத் துறையினர் பிடித்தனர்.


அந்த காரில் சோதனை செய்த பார்த்தப்போது இரண்டு யானைத் தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத் துறையின் பறக்கும் படையினர், தந்தம் கடத்தி வந்தவர்களை மொரப்பூர் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், காரில் யானை தந்தம் எடுத்து வந்தவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோவளன்காடு கிராமத்தைச் சார்ந்த விக்னேஷ், முரளிதரன் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த யானை தந்தம் கிடைத்தது எப்படி என்றும், எந்தப் பகுதியில் இருந்து யானை தந்தம் எடுக்கப்பட்டது என்றும் வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 


அப்பொழுது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஆகாஷ் என்பவர் துப்பாக்கி வைத்து யானைகளை கொன்று, அதிலிருந்து தந்தம் எடுத்துக் கொடுப்பதாகவும், அதனை தாங்கள் வாங்கி வந்து கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தங்களது உறவினர்கள் மூலம் விற்பனைக்கு கொடுப்பதாகவும், இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.


மேலும் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் துப்பாக்கி வைத்து யானைகளை சுடுவதை செல்போன் வீடியோவில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து யானைகளை தந்ததற்காக கொன்ற ஆகாஷ் என்பவரை முதல் குற்றவாளியாகவும், தந்தங்களை விற்பனைக்காக கொண்டு வந்த முரளிதரன், விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வனத் துறையினர் வழக்கு  பதிவு செய்துள்ளனர். மேலும் யானைத் தந்தங்களை ஈரோடு மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனைக்கு கொண்டு வந்த விக்னேஷ் மற்றும் முரளிதரன் இருவரையும் வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


மேலும் ஆகாஷ் உள்ளிட்ட மூவரையும் பிடிப்பதற்காக வனத் துறை பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. யானைகள் வயது முதிர்ந்து உயிரிழப்பதும், விபத்தில் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது தந்தங்களுக்காக யானைகளை துப்பாக்கியால் சுடும் சம்பவம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.