தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கோவிந்தசாமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 


இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த டைலர் கோவிந்தசாமி என்பவருக்கும் கோவிந்தசாமிக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கோவிந்தசாமியின் மூத்த மகன் முத்துலிங்கம் டைலர் கோவிந்தசாமியிடம் பணம் வாங்கியதாக கூறி, தகராறு செய்துள்ளார். அப்போது கோவிந்தசாமி இடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, தொடர்ந்து மீண்டும் பணம் வேண்டும் என கேட்டு, கம்பைநல்லூர் காவல் துறையை வைத்து, கோவிந்தசாமியை மிரட்டி செருப்பால் அடித்ததாக  கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கோவிந்தசாமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 


கடந்த 78 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காணமல் போன  நிலையில் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு குடும்பத்தினர், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து புகார் அளித்தவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. 


இதனை தொடர்ந்து கோவிந்தசாமி உறவினர்கள், நீதிமன்றத்தில் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்துள்ளனர். அப்பொழுது காவல் துறையினர், கோவிந்தசாமியின் ஊர்க்காரர்களே கடத்தி வைத்துக் கொண்டு புகார் தெரிவிப்பதாக பதில் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றம் கோவிந்தசாமியின் உறவினர்களை கண்டித்து அனுப்பி உள்ளது. இதற்கிடையில் காணாமல் போன கோவிந்தசாமி பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் வனப் பகுதிக்குட்பட்ட ஒட்டுபட்டி காப்பு காட்டில் பல நாட்களுக்கு முன் இறந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு  காவல் துறையின் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து உறவினர்கள்  உடலை அடையாளம் கண்டு கோவிந்தசாமியின் உடல் தான் என சொன்ன பிறகு பென்னாகரம் மருத்துவமணையில் இன்று  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடலை வாங்கிக் கொண்டு வந்த உறவினர்கள்  கோவிந்தசாமியின் இறப்புக்கு காரணமான டைலர் கோவிந்தசாமியை கைது செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும், கம்பைநல்லூர்-காரிமங்கலம்  சாலையில் உள்ள கோணம்பட்டி பிரிவு சாலையில்  வைத்து 200 மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை  நீண்ட நேரம் காத்திருந்தன. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், காரிமங்கலம் தாசில்தார் மற்றும் கம்பைநல்லூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். 


இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.