கடத்தூர் அருகே அமைய உள்ள புதிய அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உடலின் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் செயல்பட்டு வந்த இரண்டு அரசு மதுபானக் கடைகளில் ஒரு கடை மாற்றி ஒசஅள்ளி ஊராட்சியில் வேடியூர் அருகே அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மாலை நேரங்களில் சொந்த ஊருக்கு தனியாக வருகின்றனர். இந்த இடத்தில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கும் மது பிரியர்கள், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதுவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது புதியதாக ஒரு கடையை வேடியூர் கிராமத்தில் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இந்த கடை அமைந்தால், மேலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்பதால், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் அரசு மதுபானக்கடை அமைக்க கூடாது என ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுஅளித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மதுபான கடை அமையாது, அதனை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உறுதியளித்தார்.



 

ஆனால் இன்று மதுபானக் கடை அமைக்க தேவையான பொருட்கள் இறக்கி வைத்துள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் காரில் எடுத்து வந்த ஐந்து லிட்டர் டீசலை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு, உடலின் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவலர் துறையினர் அவரை மீட்டு கையில் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்தனர்.



 

இதனையடுத்து தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை எனக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது தீக்குளிப்பு முயற்சியின்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், தீயணைப்பு வீரர் அருகே இருந்த கடையிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊற்றினார். சுமார் ஒரு மணி நேரமாகியும் எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. மேலும் ஆட்சியரை சந்தித்தால் மட்டுமே தர்ணாவை கைவிடுவோம் என அமர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சில் ராஜ்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது கடை அந்த இடத்தில் அமைக்க கூடாது என டாஸ்மாக் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் கடை அமைவதில்லை, வேறு இடத்திற்கு அந்த கடை மாற்றப்பட உள்ளது என தெரிவித்தார். அப்பொழுது கடை ஒரு வேலை அந்த இடத்தில் அமைந்தால், நாங்கள் அதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வோம் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.