ஏழு கிராம மக்களின் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மடதஹள்ளி ஊராட்சியில் 7 கிராமங்கள் உள்ளன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மடதஹள்ளி, பசுவாபுரம் சாலையில் சிவனஹள்ளி பகுதியில் உள்ள நரசிம்ம பெருமாள் மலை உள்ளது.
இந்த மலையில் தனியார் கல்குவாரி கடந்த, 2012 முதல் இயங்கி வருகிறது. அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஏலம் விடப்பட்டு சாந்தமூர்த்தி என்பவரின் பெயரில் எடுக்கப்பட்ட, அதிமுகவை சேர்ந்த ரத்னவேல் என்பவர் இந்த கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரிக்கு அருகில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இந்த மக்கள் கல்குவாரியால் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
பத்து வருடத்துக்கு மேலாக இயங்கி வரும் கல்குவாரி
அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்குவாரியில் இரவு பகலாக தொடர்ந்து வெடி சத்தத்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் விரிசல் விடுகிறது, விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் லாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஓட்டப்படுகிறது.
கல்வாரியை நிரந்தரமாக மூட வேண்டும்
இதுதொடர்பாக, கிராம மக்கள் கூறியதாவது, அரசின் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுகிறது. விவசாய நிலத்தில் இருந்து கல்குவாரி 500 மீட்டர் தொலைவில் அமைக்கனும். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை, மாற்றியுள்ளனர். ஆனால் 50 மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கல்குவாரியை எடுத்து நடத்தி வரும் அதிமுகவை சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்கு ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினர் என அனைவரும் உறுதுணையாக இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 2ம் தேதி கல்குவாரியின் டெண்டர் காலம் முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் இரவு நேரத்தில் தொடர்ந்து அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி இயங்கி வருகிறது. அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பலமுறை புகார் அளித்தும் எட்டி கூட பார்க்கவில்லை என சரமாரியாக மக்கள் புகார் அளித்தனர்.
இதனை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி அந்த இடத்தில் கல்குவாரி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த குல்குவாரியை நடத்தும் ரத்னவேலுவின் காரை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டதால், காரை அங்கேயே விட்டு விட்டு கல்குவாரிக்குள் சென்று விட்டார்.
வட்டாட்சியரிடம் சராமரி கேள்வி எழுப்பிய கிராம மக்கள்
இந்த தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் கடத்தூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரி கேள்வி எழுப்பினர். கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், அவ்வாறு மூடவில்லை எனில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்து செல்வோம் என கூறினர்.
அதிகாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வனத்தையும் மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டும். கல்குவாரி இங்கு நடைபெறாமல் ரத்து செய்ய வேண்டும் சாலையில் செல்ல முடியவில்லை. அதிவேக லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது விவசாயம் பாதிக்கப்படுகிறது என கோரிக்கை வைத்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கல்குவாரி நட்த்தும் ரத்தினவேல் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.