ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை : குடிநீருக்கு பயன்படும் தண்ணீர் என்பதால், யானை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை
காவிரி ஆற்றில் ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி அருகே உயிரிழந்த நிலையில் யானை அடித்து வரப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த வனத் துறையினர, யானை உடலை மீட்க முயற்சி செய்துள்ளதுள்ளனர்.
அப்பொழுது யானை உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து கர்நாக மாநில வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இறந்த நிலையில் பெண் காட்டு யானை
இதில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி கரையோர பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழந்த காட்டு யானையை கர்நாடகா மாநில வனத் துறையினர் பிரேத பரிசோதனை செய்து, வன விலங்குகளின் உணவிற்காக அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை உடல்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 17,000 கன அடியாத திறக்கப்பட்டது. அப்பொழுது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை அடித்து வரப்பட்டது. அப்போது பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது.
தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது
மேலும் உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் பருகுவதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் ஆற்று நீர் கலங்கள் காரணமாக பலருக்கு உடல் உபாதைகள், வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர்ரை நம்பியுள்ள இரண்டு மாவட்ட மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
கர்நாடக வனத்துறையினர் செய்த செயலால் இரண்டு மாவட்ட மக்கள் பாதிப்பு
மேலும் கர்நாடகா வனத் துறையினர் உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப் பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால், இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.
மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப்பகுதியிலேயே அடக்கம்
தொடர்ந்து கர்நாடக வனத் துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப் பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளதாக, தமிழக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால், ஆற்றிலிருந்து யானையின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்த யானை உடல் காவிரி ஆற்றில் மிதந்து கிடப்பதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருந்தும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.