தர்மபுரி வனக்கோட்டத்தில் எட்டு வனச்சரங்கள் உள்ளன. இதில் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் ஆகிய வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகளுக்கான வாழ்வாதார பிரச்சனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


வனப்பகுதி தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம்



கடந்த ஆண்டு மே மாதம் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் 144 யானைகள் தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. யானைகள் ஒரே இடத்தில் நீண்ட காலமாக இருக்காது, இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அவ்வப்போது சேதம் ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பாலக்கோடு வனச்சரகம் பெரியூர், ஈச்சம்பள்ளம் மற்றும் அத்திமுட்லு, பென்னாகரம் வனச்சரகம், பூதிப்பட்டி மற்றும் சந்தப்பேட்டை, ஒகேனக்கல் வனச்சரகம் கோடுபட்டி ஆகிய கிராமங்களில் வனத்துறை முன்கள பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார்கள் கொண்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, வன தொட்டிகளில் நீர் நிரப்பப்படுகிறது. அதேபோல் வனத்தில் உள்ள காட்டாறு, கால்வாய்களில் குழி தோண்டி, நீரூற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் தொட்டி மற்றும் நீரூற்றுகளில் தண்ணீர் குடித்து செல்கின்றன. 


கடந்த ஆண்டு மாரண்டஅள்ளி அருகே காட்டை விட்டு வெளியே வந்த ஐந்து யானைகளில் மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. இதில் இரண்டு குட்டி யானைகள் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. இதே போல் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலை கடந்து கம்பைநல்லூர் ஏரி பக்கமாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இவ்வாறு நான்கு யானைகள் கடந்த ஆண்டு அடுத்தடுத்து உயிரிழந்தன. கடந்த ஆண்டு பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஈச்சம்பள்ளம், அத்திமுட்லு, பஞ்சப்பள்ளி போன்ற இடங்களில் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து வார கணக்கிலும், மாத கணக்கிலும் முகாமிட்டு விளை பயிர்களை சேதப்படுத்துகின்றன.  


யானைகள் காட்டை விட்டு வெளியேறுவது குறித்து வனத்துறை தொடர்ந்து ஆய்வு நடத்தியதில் அதன் வசிப்பிடங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக செல்பவர்கள் நிரந்தரமாக பட்டியல் அமைத்து அங்கேயே தங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் தீ மூட்டி யானைகள் விரட்டுவதும், சமைப்பதுமாக இருந்து வருகின்றன. இதனால் யானை மற்றும் வனவிலங்குகள் தங்கள் இருப்பிடத்தில் விட்டு இடம்பெறவும் வெளியே வரவும் தொடங்கின.


குறிப்பாக கடந்த மார்ச் ஏப்ரல் மாதம் மே மாதங்களில் யானைகள் வெளியே வருவது அதிகரித்துள்ளது. பாலக்கோடு வனச்சரத்தில் தான் அதிகமாக யானைகள் வெளியே வந்தன. தொடர்ந்து பென்னாகரம் வனச்சதத்தில் யானைகள் வெளியே வந்தன.


கர்நாடக யானைகள் ஓசூர் வனக்கோட்டம் ஜவுளகிரி, உரிகம், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக பாலக்கோடு வனப்பகுதிக்குள் வந்தது. அவ்வாறு வரும்போது அடர்ந்த வனப்பகுதியில், ஆடு, மாடுகளுக்கு பட்டி அமைத்திருப்பதை பார்த்ததும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டவாறு, விளை நிலங்களுக்கும் ஊருக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.  


இதனை அடுத்து அடர்ந்த வனப்பகுதியில் ஆடு, மாடுகளுக்கு பட்டி அமைப்பவர்களை வனச்சட்டத்தின் படி, தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் வெளியேற்றினர்.


கால்நடைகளுக்கு மேச்சலுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். அங்கு தங்கவும் ஆடு, மாடுகளுக்கு பட்டி அமைக்கவும் தடை விதித்தனர். 


இதனால் நடப்பாண்டு கோடை காலத்தில் யானைகள் அதிகம் வெளியே வருவது தடுக்கப்பட்டது. யானைகளால் உயிர் சேதமும் ஏற்படவில்லை. பாலக்கோடு வனச்சரத்தில் யானைகளை கண்காணிக்க 12 பேர் கொண்ட தனிக் குழுவும், வனச்சரகர், வனவர் என 30 பேர் கொண்ட வனத்துறையினர் பாலக்கோட்டில் மட்டும் உள்ளனர். இதேபோல் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரத்திலும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  


யானைகள் அதிகம் வசிக்கும், நடமாட்டம் உள்ள பாலகோடு வனப்பகுதியில் 75 பட்டியும், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியில் 150 பட்டியும் அகற்றப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு கோடை காலத்தில் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவது குறைந்தது.


இதனால் தர்மபுரி மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளது.  யானைகள் சுதந்திரமாக காட்டில் உலா வருகின்றன. நரி, கரடி, ஓநாய் நடமாட்டம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் மொரப்பூர்,  அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, தர்மபுரி ஆகிய வனச்சரவத்திலும் 200-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு பட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.


இதனால் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 500 ஆடு, மாடு பட்டியல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.