கோடை காலம் தொடங்கிய நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினந்தோறும் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவே பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் வீசத் தொடங்கியது. மேலும் 48 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் 108 டிகிரியாக வெப்பம் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு விவசாய பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து கருகி வந்தது. மேலும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வந்தனர். இதனால் கோடை மழை கை கொடுக்குமா என்று, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் எதிர்பார்த்து வந்தனர். 




இந்நிலையில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் 108 டிகிரி வெப்பம் பதிவாகிய நிலையில், அன்று மாலையே கோடை மழை தருமபுரி மாவட்டத்தில் பொழிய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.  தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த கோடை மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பொழிந்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து தருமபுரி மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இந்த நிலையில் வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமலேயே வீசி வந்தது. தொடர்ந்து நேற்று தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம், 100 டிகிரிக்கு குறைந்து 97 டிகிரியாக பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் இரவு தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே பள்ளம் இருக்கின்ற இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து 97 டிகிரியாக பதிவாகி இருந்தது. மேலும் தொடர்ந்து 42 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் அளவு பதிவாகியிருந்த நிலையில், இன்று 42 நாட்களுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு குறைவாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.