தருமபுரி நகரில் நள்ளிரவில் வீடு புகுந்து அடுத்தடுத்த 2 வீடுகளில் நுழைந்து முகமூடி கொள்ளையர்கள், பெண்களை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 47 ஆயிரம் ரொக்கம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தருமபுரி நகரையொட்டியுள்ள பிடமனேரி மொன்னையவன் கொட்டாய் பகுதி சேர்ந்தவர் சின்னசாமி. இவர், நேற்று இரவு வீட்டுக்கு செல்லாமல் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். இதனால் வீட்டில் சின்னசாமியின் மனைவி சாந்தி மட்டும் தனியாக இருந்துள்ளார். நள்ளிரவில் கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 47 ஆயிரம் ரூபாய் பணம் இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை எடுத்துள்ளனர். அப்போது சாந்தி உள்ளே சென்று மின் விளக்கை போட்டபோது, அவரின் கழுத்தில் இருந்த ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர்.


இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் ராஜீவ்காந்தி மனைவி ரேவதி ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் கூச்சலிட்டதால், நகையை பறிக்க முடியாமல் போனது. அப்போது மனைவியை காப்பாற்ற சென்ற ராஜீவ்காந்தியை கொள்ளையர்கள் கற்களால் தாக்கியதில், தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


 இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் கொள்ளை நடந்த இரண்டு வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் ஏழரைப்பவன் தங்க சங்கிலி 47 ஆயிரம் ரொக்கம் இரண்டு செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து, காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.