தேன்கனிக்கோட்டையில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 14 பவுன் நகைகள், ரூ.3.50 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம கும்ப கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் யாரப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்வதால் தேன்கனிக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல் தேன்கனிக்கோட்டை டாலர் காலனிக்கு சென்றுள்ளனர். அங்கு பேட்டரி கடை உரிமையாளரான நவாஸ் கான் (42) என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகை 1.25 லட்சம் ரொக்கம் மற்றும் 1.1/2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள ஹனி வேலி என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வெங்கடேஷ் (40) என்பவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகை 2. 25 லட்சம் ரொக்கம் மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்களை திருடியுள்ளனர்.
தொடர்ந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் கார்த்திக் (46) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை திருடி சென்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் டிரைவர் ரவி (46) வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பார்த்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை தட்டில் போட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு தட்டுகளை கழுவாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
உருஸ் திருவிழா சென்றவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் உடனே சென்று தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து டி.எஸ்.பி சங்கர் தலைமையில் எஸ்.ஐ ஜெயந்தி உள்ளிட்ட போலீசார் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.