தமிழகத்தில் 8 மாவட்ட காவிரி கரையில் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ஒகேனக்கலில் தர்மபுரி ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.
ஒகேனக்கலில் ஒரு கோடி பனை விதை நடும் விழா தொடங்கியது
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஊட்டமலை பரிசல் துறை அருகில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையில் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் தொடக்க விழா நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சாந்தி பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைத்தார் பின்னர் அவர் கூறியதாவது:-
பனை விதைகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் பனை நடுவதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும் இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனைமர விதைகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
15 நாட்களாக சேகரிக்கப்பட்ட பனை விதை
அதன்படி, பணியில் கடந்த 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கப்பட்டது. அவற்றை ஐந்து கட்டங்களாக நடும்பனி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையின் இரு பக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது. இதே போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர் நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது.
100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபடுகின்றனர்.
காவிரி கரை ஓரம் இருபுறங்களிலும் நடும் பண விதைகள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்கள், 251 ஊராட்சிகளில் 5 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி கரை ஏறி, குளம், குட்டைகளில் 1.65 லட்சம் வன விதைகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இந்த பனை விதைகளை நடும் பணி வரும் 15ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கௌரவ குமார், மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், பெங்களூர் ஜவுளி அமைச்சகம் மற்றும் மத்திய பட்டு வாரிய இயக்குனர் மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, க இணைய இயக்குனர் சிந்தியா செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.